பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பின்னரே அன்புடையராக ஒழுகுவர். ஒழுகுதலே உடைமை களின் உரிமை நிலையைக்காட்டும்; உணர்த்தும்!

கடவுள்நெறி என்பது, அவர் தாம் மேற்கொண் டொழுகும் ஒழுக்க நெறிகளாலேயே உணரப்படும். கடவுளை நினைந்து அந்நெறி நின்று ஒழுக விரும்பின், கடவுள், விரும்பும் உயிர்கள் மாட்டு விரைந்து உள்நின்று உதவி செய்வான்; காட்டுவான்; வழி நடத்துவான். கடவுள் நம் மனத்தில் எழுந்தருள நெடிய காலம் தேவையில்லை. புற்றாக மரமாக நின்று தவம் செய்ய வேண்டியதில்லை. தேவை, கடவுளைப் பற்றி நினைத்தல் ஒன்றே!

நினைத்தல் என்பது ஆழமான சொல். ஆசைகளால் உந்தப்பெற்றும் துன்ப அலைகளால் எய்ப்புண்டு இரங்கத் தக்க நிலையிலும் கடவுள் நினைவு வருதல்- நினைத்தல் ஆகாது. நீள நினைத்தாலே நினைத்தல்-அசை வில்லாது நினைத்தலே நினைத்தல்-நினைப்பும் மறப்பு மின்றி நினைத்தலே நினைத்தல்-ஒருமையுடன் நினைத்தலே நினைத்தல்-அலையும் மனத்தினாலன்றிச் சிக்கெனப் பிடித்து நிலையாக நினைத்தலே நினைத்தல் நினைத்தல் அருமையான அகநிலைப் பயிற்சி !

உலகியல் வாழ்விலே கூட நட்பு, காதல், பணிக்கள வாழ்க்கையில்கூட நினைக்கும் பயிற்சி இருந்தால் நிறைந்த ஆற்றல் பெறலாம்; கிடைத்த உறவுகளையும் செழிப்பாக வளர்த்துக் கொள்ளலாம்; அபசுரம் இருக்காது. ஆதலால் திருவிழாவுக்குத் திருவிழா கடவுளை வழிபடுதல், நினைத்தல் ஆகாது. நினைப்பற நினைக்க வேண்டும்! அப்படி நினைந்தால் நினைப்பது முன்பா? கடவுள் வந்தருளித் துணை நிற்றல் முன்பா? என்று கண்டு கொள்ள முடியாத கால விரைவில் கடவுள் இதயத்தின்கண் எழுந்தருளி நின்றருளுவான். சாக விரும்பாதீர்! நிலமிசை நெடுநாள் வாழ விரும்புமின்! வாழ்வாங்கு வாழ ஆர்வம் காட்டுமின்!