பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் செல்வம்

173


இந்த வேண்டுதல், வேண்டாமைச் செல்வாக்கு மிக அதிகமாகத் தாக்கிப் பாதித்துள்ளது.

அதனால், வேண்டியவர் வேண்டாதவர் என்ற அணிகளுக்கிடையில் சமுதாயம் சிக்கித் தவித்துச் சீரழிகிறது; துன்பங்கள் பெருகிவிடுகின்றன! ஆதலால், வேண்டும்வேண்டாமை என்ற குறுகிய-துன்பங்களைத் தரும் எல்லை களுக்கு இரையாகக்கூடாது. எங்காவது தலைகாட்டினாலும் அன்பினால் ஒத்துழைத்து மாற்றி ஒப்பற்ற ஒரு கூட்டுச் சமுதாயத்தைப் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி அடைய வேண்டும். அப்போதுதான் துன்பம் தீரும்! எங்கும் எப்பொழுதும் இன்பம்! பெருகும்!

கடவுள், வேண்டுதல், வேண்டாமை இல்லாதவர். ஆதலால் சாதியமைப்புகள், பணக்காரன்-ஏழை என்ற வேறுபாடு, நாடு, எல்லை முதலிய வேறுபாடுகள் அனைத்தும் மனிதனால்-இல்லை, விலங்குணர்ச்சியுள்ள மனிதனால்வேண்டும், வேண்டாமை என்ற நச்சுப் பாம்பால் கடிக்கப் பட்ட நச்சு மனிதனால்-படைக்கப் பட்டவையே! இந்த நச்சுப் பாம்பு மானிட சாதியைக்கடித்துப் பல ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன! இந்த நஞ்சிலிருந்து மானிட சாதியைக் காப்பாற்றக் கொடுத்த அன்பு, அருள், ஒருமைப்பாடு முதலிய மருந்துகள் எல்லாம் செல்லுபடியாகவில்லை. ஏன்? இந்த மருந்துகளும்கூட சார்ந்ததன் காரணமாக நஞ்சாகி விட்டனபோல் தெரிகிறது.

இன்று, எங்கும் சாதிச் சண்டைகள்! கட்சிச் சண்டைகள்! தெருச் சண்டைகள்! ஊர்ச் சண்டைகள்! நாட்டுச் சண்டைகள்! சமயச் சண்டைகள்! அந்தோ! வாழப் பிறந்த மானிட சாதி வேண்டும், வேண்டாமை என்ற நஞ்சினால் உள்ளிடழிகிறது; உருக்குலைந்து போகிறது!

அளப்பரிய மானிட சக்தி சில்லறைச் சச்சரவுகள், சண்டைகளில் வீணடிக்கப்படுகிறது! கடவுளையும் இந்தக் கொடுமைகளுக்கு மனிதர்கள் சாட்சியாக்கியிருக்கிறனர். அதனால்தான் கடவுள் காணப்படாத பொருளானார்