பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15


கொடுமை தீர்க்க மாந்த குலம் போராடவும் வேண்டும் எனும் புரட்சிகரச் சிந்தனை கொண்டவராய் அடிகளார் விளங்கினார். சாணக்கியர், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரின் அரசியல் கருத்துகளுடன் வள்ளுவத்தை ஒப்பிட்டு, அவர்களுடைய கருத்துகளைவிட திருக்குறள் நெறி மேம்பட்டிருப்பதை அடிகளார். நன்கு விளக்கியுள்ளார். கார்ல் மார்க்ஸ், மூலதனம்' எனும் நூலை எழுதியுள்ளார். அதில் நன்கு தோய்ந்த அடிகளார், "இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை விரும்புகின்றவர்கள், வள்ளுவத்தையும் மூலதனத்தையும் ஒரு சேரக் கற்றுத் தெளிய வேண்டும். வள்ளுவமும் மார்க்சீயமும் காட்டும் புதியதோர் உலகத்தை அமைக்கும் பணியில் போர்க் குனத்துடன் ஈடுபடவேண்டும். போரிட வேண்டும். சுக வாழ்வுப் போக்கிலிருந்தும் நுகர் பொருள் சந்தைகளிலிருந்தும் வெளியேறி சமூக சிந்தனையைப் பெற்று,

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்

என, பாரதியார் கனவை நனவாக்கப் போரிடவேண்டும்" என எழுச்சி கொள்ளச் செய்கிறார்.

குறட் பாக்களுக்கு அடிகளார் தரும் விளக்கங்கள் எளிய நடையில் பொருட் செறிவுடன் விளங்குகின்றன. "செயல்கள் அனைத்திற்கும் சிந்தனையே அடிப்படை. சிந்தனையின் நிலைக்களன் மனம். நாம் செய்யும் செயல்கள் பலவற்றில் தூய்மை காணவேண்டும் என்று தனித் தனியாக முயல்வதைவிட, செயல்கள் அனைத்திற்கும் பொறுப்பாக உள்ள சிந்தனையைத் திருத்தி மனத்தை மாசின்றி வைத்துக் கொள்வது நல்லது; சிறந்தது. இதன் மூலம் நாம் செய்யும் அறங்களும் மிகச் சிறந்து விளங்கும்"இது மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்' என்னும் குறளடிக்கு அடிகளார் தந்துள்ள விளக்கம்.

அடிகளாருடைய எழுத்து நடை தனித்த தன்மையுடையது. எளிய தொடர்கள். எதிரிலிருந்து பேசுவதுபோன்ற உணர்வைத் தோற்றுவிப்பது; பேச்சும் எழுத்தும் ஒன்றுபோலவே அமைந்த பாங்குடையது. சான்றுக்கு ஒரு பகுதி: "உன்னுடன் பழகியவர்கள் உனக்குக் கொலையனைய கொடுந் துன்பங்களைச் செய்யும் பொழுதும் செய்பவர் மீது சினவற்க; பகை கொள்ளற்க; யாதொரு தீமையும் செய்யற்க; அந்த நேரத்தில் அவர் செய்த