பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் செல்வம்

177


அதுபோலக் கேட்டினைத் தழுவிக்கொள்ள நினைப் பவர் வெகுளிகொள்ளுதற்குரிய சூழல் இல்லாத பொழுதும் வெகுளுவர்; இகலிப்பொருதுவர் உற்றார்-உறவினரோடு கூடப் பொருதுவர்; நல்லவர்களுடன் கூடப் பொருதுவர்; ஏன் ! ஒன்றுமறியாத அப்பாவிகளுடன் கூடப் பொருதுவர். வெகுளுதற்குரிய காரணங்களைக் கண்டு பிடிப்பவர், இல்லாதுபோனாலும் படைத்திடுவர். அப்போது சிறு செயல்கள் கூடப் பெரிதாகத் தோன்றும். இந்த அடையாளங்கள் என்றைக்கு ஒருவர் வாழ்க்கையில் காணப்படுகின்றனவோ அன்று அவருடைய வாழ்க்கை முற்றுப் புள்ளியை நோக்கி விரைந்து சென்றுகொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வரலாம்.

இங்ஙனம், வறிதே இகலுகின்றவர் அல்லது உணர்ச்சி வசப்பட்டுத் தம்முடன் முரணி இகலிவருவோரை இகலுபவர் யாராயினும்-அவர்கள் எவ்வளவு பெரிய வளத்தோடு கூடிய வாழ்க்கை வாழ்ந்தாலும் நிச்சயமாக அதனை இழப்பர்

படைவலி யுடையரானாலும் அதனை இழந்து அடிமையாவர். ஏன்? அவர்கள் கடவுளின் கருணையையே பெற்று மாபெரும் சக்திகள் பெற்றவராயினும் அவற்றையும் இழந்து வெறும் மனிதராவர். இதுவே வரலாறுகாட்டும் படிப்பினை! இதிகாசங்கள்-புராணங்கள் உணர்த்தும் உண்மை !

துரியோதனன் வறிதே வெகுண்டு இகலிப் பொருததின் காரணமாக எல்லாவற்றையும் இழந்தான்! துரியோதனன் அகத்தே ஐவரோடு போராடாமல், புறத்தே ஐவரோடு போராடியதால் ஆக்கத்திற்குப் பதிலாக அழிவை அணைத்துக் கொண்டான்.

சூரபதுமன், வலிமையின் மிகுதியால் வெகுண்டு இகலுகின்றான்; ஆற்றலை இழக்கின்றான். அவனைப் பிடித்தாட்டிய பேய், அதிகாரம் அம்மம்ம! அதிகாரம் படுத்துபாடு இவ்வளவா! அவ்வளவா! அஃது உலகத்தில்