பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

ஏதாவது ஒரு நன்மையை நினைத்துக்கொள், அந்த நினைப்பு கொடுமை செய்தார்மாட்டு அன்பைக் காட்டத் தூண்டும்; பகையை மாற்றும் பண்பாடு வளரும். இத்தகு வாழ்வே மானுடத்தின் சிறந்த வாழ்வு; சால்பு மிகுதியும் உடைய வாழ்வு".

நகைச் சுவையே பேச்சு என்றுள்ள இக்காலத்தில் அடிகளார் பேச்சில் நகைச்சுவை மிகமிக அருகியே தோன்றும். ஆனாலும் மக்கள் கூட்டத்தின் சிந்தனையைச் சிறிதும் சிதறவிடாது தன்பால் ஈர்த்துத் தேனில் படிந்த வண்டுபோலத் திளைக்கச் செய்யும் திறமை அவருடைய கருத்துச் செறிவான பேச்சுக்குண்டு.

தக்க எடுத்துக்காட்டுகள் வாயிலாக அவர் செய்திகளை விளக்குவது ஒரு தனிப்பாங்கு. "அன்பு எப்போதும் உலகத்தைத் தழீ இயது. உலகையே உறவாகக் கொண்டது. தேநீர் அருந்துபவர்கள் 'கப்-சாசர்' பார்த்திருப்பீர்கள். கப்பில் தேநீர் சூடாக இருக்கும். சாசரில் ஊற்றினால் சூடு ஆறிவிடும். ஆதலால் சூடான தேநீரை சாசரில் ஊற்றிக் குடிப்பது அன்றாடக் காட்சி, சுருங்கியவெல்லாம் துன்புறும்; அழிவுறும். விரிந்த எல்லாம் வளரும் - அவருடைய எடுத்துக்காட்டு விளக்கத்திற்கு இஃதோர் எடுத்துக்காட்டு..

அடிகளாருடைய பேச்சிலும் எழுத்திலும் வரையறைகளாகப் பலவற்றைக் காணமுடியும். சான்றுக்குச் சில:

“அறம் என்பது மனித வாழ்வின் தீமையை அகற்றித் துன்பங்களை விலக்கி இன்பத்தைத் தருவது".

"நாகரிகம் என்பது உலகை இடையறாது உய்த்து நடத்தும் ஒரு சிறப்புடைய உணர்வு வழிப்பட்ட ஒழுக்கமாகும்”

"துறவு என்பது ஒரு வாழ்க்கை முறை. எந்த ஒன்றின்பாலும் அளவற்ற ஆசை வைப்பின் தீதாக முடியும்"

"ஒருவரின் சாதனையை அனுபவித்த ஒருவர் மகிழ்ந்து, தம் உள்ளம் நெகிழ்ந்து மொழியும் சொற்களே புகழ்"

வறுமை, பசிக்கொடுமை பற்றி நினைக்க நேர்ந்தால் அடிகளாருடைய கண்களில் துன்பக் கண்ணீர் மளமளவென வழியும். உணர்ச்சி வயப்பட்டு அவருடைய பேச்சும் அப்போது கலங்கும். 'அந்த வேளை அந்த ஞானிக்குள்ளும் ஒரு தேம்புதல்' உண்டாகும். வறுமை தீரவில்லையெனில் கடவுள் தான் எதற்கு என்று கூடக் கேட்கிறார். "கடவுள்