பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறவழிகாட்டி

191


அதனால்தான் நாம் இதை நினைவுபடுத்த எண்ணினோம். வள்ளுவரைப் பாராட்டுவதோடு மட்டும் இல்லாது வள்ளுவரின் பண்பாட்டிற்குப் பாராட்டு எடுங்கள் என்று சொல்ல ஆசைப்படுகிறோம்.

ஆசிரியரைப் பற்றியும் அவர் காலம், சமயம் இவற்றைப் பற்றியும் சண்டை செய்தல் வேண்டாம் என்று சிலவிடங் களில் நாம் நினைவுபடுத்துவது உண்டு. வள்ளுவர்தான் ஆசிரியர் என்று சொல்வதாலன்றோ சண்டை எழுகிறது. திருக்குறளை ஊன்றிப் படிக்கின்றபொழுது எவ்வளவோ தெரிந்து கொள்ளலாம். இப்பொழுது புதிய ஆராய்ச்சி யொன்று வந்திருக்கிறது. அது, திருவள்ளுவர் திருக்குறள் செய்யவில்லை. பெயரில் அவர் ஒருவரை வஞ்சித்தார் என்று முடிவுகட்டி எழுதியிருக்கின்றார். அது ஆங்கிலத்தில் அச்சானதன் காரணத்தால் இந்நாட்டு மக்களிடைக் கிளர்ச்சியைத் துாண்டவில்லை. திருவள்ளுவர் திருக்குறள் செய்யவில்லை என்பதற்கு அவர் எடுத்துக் கொண்ட சான்றுகள் இரண்டு. ஒன்று:---


ஆவனவும் ஆகா தனவும் அறிவுடையார்
யாவரும், வல்லா ரெடுத்தியம்பத்-தேவர்
திருவள்ளுவர் தாமும் செப்பியவே செய்வார்
பொருவி லொழுக்கம் பூண்டார்

தேவர் என்ற புலவர் திருக்குறள் செய்தார். திருவள்ளுவர் என்பவர் அவருடைய மாணாக்கர். தேவர் முதுமை காரணமாகத் தாம் செய்த திருக்குறளைத் திருவள்ளுவரிடங் கொடுத்து மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்குக் கொண்டு போகச் சொன்னார். அவரை வஞ்சித்துத் திருவள்ளுவர் மதுரையில் திருக்குறள் செய்தவன் நானே என்று கூறி விட்டார் என்பது.