பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறவழிகாட்டி

195


அறிந்து முடிவுகட்டுக; நிலைத்த இன்பம் தருகின்ற ஒன்றைப் பற்றிக்கொள்க'வென்று சொல்கிறார். இதில் எத்துணையோ ஆழ்ந்த பொருள் உண்டு. எத்தனை உரையாசிரியர்கள் தோன்றினும் வள்ளுவரை முழுதும் காண இயலாது. வள்ளுவரை யாரும் முடிவுகட்ட முடியாது. திருக்குறள் அறிவுக் கருவூலம். வாழ்க்கையிலே அறிவு பெறாது குழந்தைகளாக இருக்கின்றவர்கட்கு இடமே கிடையாது. நாம் இன்னும் வளர்ச்சியடையவேண்டும். சங்கத்தமிழ் முழுவதும் பயின்ற பேரறிஞர்கள் அனைவரும்கூடச் சில விடங்களிலே தவறிவிட்டார்கள் என்று நமக்குத் தோன்றுகிறது. நாம் தவறிவிட்டோம் என்று நமக்குப் பின் வருகின்ற பரம்பரை சொல்லும். தவம் என்ற அதிகாரத்தில் ஒரு குறள்,

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

இதற்குப் பரிமேலழகர், செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மையின்மைகளையுங் குறித்து நின்றன என்று குறிப்பிடுகின்றார். மணக்குடவர் அறிவின். என்று முதலில் எழுதுகிறார். செல்வம் என்றும் கல்வி என்றும் சொல்லுகிறார். இதன் கருத்தை நோக்குவோம். செல்வத்தின் கண் உள்ள வெறுப்பால்தானே தவஞ்செய்ய முனை கின்றனர். அவ்வாறு அவர்கள் தவஞ்செய்தால் செல்வம் பெறுவார் என்று சொன்னால் பயனில்லையே. மற்றொன்று: அறிவு என்று கொண்டால் அறிவின் துணைகொண்டு அதை உணர்ந்து தானே தவத்திற்கு நாடிச்செல்லுகிறான். ஆகை யால் அறிவின் முழுத் துணையிருந்துதானே அவன் செல்லுகிறான். ஆகையால் அறிவு என்று சொன்னாலும் அவ்வளவு பொருத்தமாக இல்லை. ஆதலின், இரண்டையுஞ் சொல்ல முடியாது.

நம் இலக்கியத்தை வைத்துப் பேசுகிறபொழுது ஒன்று சொல்ல வேண்டியிருக்கிறது. எப்பொழுதும் தவஞ்