பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17

புரோகிதர்களிடத்தில் சிக்கிவிட்டார்; சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தருவதில்லை. காரணம் பூசாரிக்குப் பணப்பெட்டி நிறையவேண்டும். அவர் வல்லார் பக்கம் சார்ந்து, மாட்டாதாரை ஒதுக்கி, வல்லாரின் செல்வக் குவிப்புக்குக் கடவுளைக் காட்டி நியாயம் கற்பித்துக் கொடுத்து வளர்கின்றார். கடவுள் நம்பிக்கையுடையோரின் நீதிக்குப் புறம்பான இச்செயல்தானே நாத்திகத்தைத் தோற்றுவித்தது? கடவுள் தோன்றிய பிறகு, இன்றும்வருவது கொல்லோ? (வறுமை இன்றும் வருமோ?) என்றால் கடவுள் நெறி எதற்காக? - கடவுள் பெயரால் ஏய்த்துப் பிழைப்போர் மீது அடிகளார் ஏவுகின்ற வினாக் கணை இது. சமய நிலையங்களே வழிமாறியுள்ள நிலையையும் சாடுகிறார். “இன்று நம்முடைய சமய நிலையங்களில் சூழ்ந்திருக்கின்ற குறைகளில் தலையாயது மடைப்பள்ளியின் ஆட்சியேயாகும். ஐம்புலன்கள் ஆர அருளாரமுதத்தை அனுபவிக்க வேண்டிய திருக்கோயில்களில் பொறிகளுக்குத் தீனிபோடும் சூழ்நிலை' - இது அடிகளாரின் கவலை.

கள்ளங் கபடமற்ற உள்ளம்; தெளிந்த சிந்தனை: கேட்பவர் காதுகளில் சென்று தைக்கும் எடுப்பான குரல், உடல் குலுங்கக் கட கட' எனச் சிரிக்கும் இயல்பு. கான வருபவர்க்குக் கையில் பழம் கொடுக்கும் இயல்பு. கூட்டங்களை முடித்துக்கொண்டு திரும்பும்போது இரவில் வழியில் எங்காவது ஒரு மரத்தடியில், கட்டித் தந்த இட்டளிப் பொட்டலத்தைத் தானே விரித்து, உடனிருக்கும் நண்பர்களுக்கும் தந்து தானும் உண்ணும் எளிமையோ டியைந்த ஒரு துறவியை குன்றக்குடி அடிகளாரைத் தவிர வேறு எவரையேனும் காண முடியுமா? இல்லை, எண்ணித்தான் பார்க்க முடியுமா? வள்ளுவ நெறி, தந்தை பெரியாரின் தன்மானக் கொள்கை, கார்ல் மார்க்சின் பொருளாதாரச் சிந்தனை ஆகியவற்றின் ஒன்றிணைந்த வார்ப்பாக அடிகளார் திகழ்ந்து வந்தார்.

          ஏறு விடாமல் ஏறு மென்மேல்!....
          அறிவை விரிவுசெய் அகண்ட மாக்கு
          விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!...
          உலகம் உண்ணஉண் உடுத்த உடுப்பாய்
          புகல்வேன் உடமை மக்களுக்குப் பொது
          புவியை நடத்து பொதுவில் நடத்து
          வானைப் போல மக்களைத் தாவும்
          வெள்ள அன்பால் இதனைக்
          குள்ள மனிதர்க்கும் கூறடா தோழனே!