பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செய்கின்ற பெரு மக்கள் தமக்காகத் தவஞ் செய்வாரல்லர். "உலகை வாழ்விக்கத் துறந்தவர்க்குத் துப்புரவு வேண்டியே மற்றையவர் தவம் மறந்தார்” என்று வள்ளுவர் குறிப்பிடுதலுங் காண்க. தவஞ்செய்கின்றவர் தம்மைக் குறித்த நினைவில்லாதவர், ஆகையால் தவஞ்செய்ய எண்ணுகின்ற பொழுது தம்மை மறக்கின்ற நிலை வேண்டும். அதனைத் தான் மற்றோரிடத்தில்,

தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்

என்ற மேற்கொள் காட்டிச் சொல்லுகின்றார்.

"நாம் ஒழிந்து, சிவமானவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ” என்று மாணிக்கவாசகர் பாடுகின்றார்.

கோவில்களில் சீர்திருத்தம் வரவேண்டும் என்று விரும்புகின்றவர்களில் நானும் ஒருவன். கோவிலுக்குப் போகின்ற நம்மிடத்தில் என்ன எண்ணம் இருக்கின்றது? இங்கிருந்து தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் எல்லாம் கொண்டு போகிறோம்.-ஆண்டவன். எங்கும் நிறைந்தவர். உள்ளுகின்றவர் உள்ளத்தில் எல்லாம் ஒளி விளக்காய்க் காட்சியளிக்கின்றவர். இவ்வாறு நிறைந்து விளங்கும் ஆண்டவன் திருமுன்னர்ச் சென்று நான்தான் அருணாசல தேசிகர், என்னுடைய நrத்திரம் இது எனச்சொல்லி அர்ச்சனை செய்வோமானால் அதைவிட வேறு நிலை யில்லை. அவனருள் வாழவேண்டும்; அவன் திருவடி வாழவேண்டும். ஞாலம் நின்புகழே மிகவேண்டும் என்று ஏன் பாடினார்? ஞானசம்பந்தர் ஏன் மதுரை வந்தார்? சமணர்களை வெல்ல வேண்டும் என்பதற்காக வந்தார். சமணர்களைப் புறங்காணவேண்டும். அதற்குத் துணைசெய் என்றல்லவா ஆண்டவனிடம் கேட்கவேண்டும்? ஆனால் அவர் அப்படியொன்றுங் கேட்கவில்லை. ஞாலம் நின்புகழே மிக வேண்டும் என்று வேண்டினார். இத்தகைய வழக்காறு