பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறவழிகாட்டி

201


சொல்கிறார். இவ்வாறாக இரண்டு பெருமக்களும் உயிர்க்கு ஊதியம் கூறுகிறார்கள்.

கொடுப்பதற்காகவே பிறந்த நாடு தமிழ்நாடு என்று சொல்வார்கள். "வடவேங்கடம் தென்குமரி, ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்” எனத் தொல்காப்பியர் கண்ட தமிழகத்தை இன்று காணமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. வருகின்றவர் களையெல்லாம் 'வாருங்கள், வாருங்கள் காவிரியாற்றுத் தண்ணீர் இருக்கிறது; நல்ல சோறு இருக்கிறது' என்று வரவழைத்து அள்ளிக்கொடுத்ததன் காரணத்தால் இன்று கூவத்திற்கு இப்பால் ஒதுக்கப்படுகின்ற நிலை வந்துவிட்டது. கொடுப்பதன் காரணமாக வறுமைவரினும் கொள்ளத்தக்கது என வள்ளுவர் சொல்கிறார். கடல்கொண்ட நாட்டுக்குத் தள்ளிவிட்டாலும் போகலாம்; வந்தவனுக்கு இடங் கொடுத்துத் தமிழன் போனான் என்ற பண்பாடு இருக்குமன்றோ? இத்தகைய பண்பாடு தமிழனுக்கே உரியது.

திருவள்ளுவர் புலமைக்கு ஒரு இலக்கணம் கூறுகிறார். 'நுண் மாண் நுழை புலம்' என்று சொல்கின்றார். எல்லோரும் உயர்வு தாழ்வு இல்லை என்று சொன்னாலும் நாம் ஒத்துக்கொள்ளவில்லை. திருவள்ளுவர் "பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா, செய்தொழில் வேற்றுமை யான்" என்று பேசுகிறார்.

அதுபோலக் கொடுக்கின்ற கூட்டத்தையும் மூன்று வகையாகக் காண்கின்றார். அதில் ஒருவகை மக்கட் கூட்டத்தைக் காண்போம். இக்கூட்டத்தைப் பற்றிக் கூறும் போது வள்ளுவர் "ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம், பேரறிவாளன் திரு” என்று குறிப்பிடுகின்றார். ஊருணி நீர் பிறரால் எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்தால் கெட்டு விடும். ஆனால், பிறர் எடுத்துக் கொண்டிருந்தால், அந்நீர் அடிக்கடி வெளியேற்றப்படுவதன் காரணமாகத் துய்மைத் தன்மை பெறுதல் இயல்பு. தன் துய்மையைப் பெற்றுக்