பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறவழிகாட்டி

203



அரைத்துச் சாப்பிடு' என்பர்; இவ்வாறு வேரிலிருந்து பட்டை வரை அனைவர்க்கும் மருந்துசொல்லிவிடுவர். இத்துணை மக்களும் அந்த ஒரே மரத்தை முற்றுகையிடுவர். ஒருவர் வேரை வெட்டுவர்; ஒருவர் பட்டையை வெட்டுவர். இத்தனை பேருக்கும் அசைந்து கொடுக்காது கொடுத்து வாழ்கின்ற மரத்தைப் போன்ற பெருந்தகையாளர் என்று பாராட்டுகிறார்.

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்

என்ற குறள் நயம் காண்க. இவ்வாறு உவமை கூறிய பெருமை திருவள்ளுவர்க்கே உண்டு.

'செல்வத்தின் பயன் ஈதல்' என்ற பண்பாடு தமிழ் நாட்டிற்கே உரியது.

சிலர், ஏதாவது கேட்கின்றபொழுது தங்களிடத்தில் இல்லையே என்று சொல்கிறார்கள். இவ்வாறு சொல்வது கூடப் பிழையாம். இல்லையே என்று சொல்கிறவனிடத்தில் உடல் வலிவு இருக்கும்; அது இருக்கும்போது இல்லையே என்று சொல்லுதல் பிழை. கேட்கின்றவரைச் 'சற்று இருங்கள்' எனச்சொல்லிவிட்டுச் சென்று தேடிச் சம்பாதித்துக் கொடுக்கவேண்டும் என்று தமிழ்நாட்டு நாகரிகம் சொல்லுகிறது. 'தனக்கு மிஞ்சித் தானதருமம்' என்பது நம் நாட்டுப் பழமொழி அன்று. அப்படிப்பட்ட நாகரிகத்தில் வாழ்ந்த இந்நாட்டில் இன்னும் இந்தநிலை வளரத்தான் செய்கிறது. இந்த நிலை வளர்ந்து வரும் என்ற நம்பிக்கை உண்டு.

சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், கன்பூஷியஸ் போன்ற மேல்நாட்டு அறிஞர்களிடத்தில் திருவள்ளுவர் கருத்துக்கள் பலவும் காணப்படுகின்றன. இத்தனை அறிஞர்களும் ஒத்துப்போகிற நிலையைப் பார்க்கும்போது திருவள்ளுவரைப் பார்த்துத்தான் இவர்கள்