பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறவழிகாட்டி

205


பிறந்த அனைவர்க்கும் வாழத் தகுதி உண்டு என்பதைத் திருவள்ளுவர்,

எவ்வ துறைவ துலகம் உலகத்தோ,
டவ்வ துறைவ தறிவு

என்று சொல்கிறார். 'உலகத்தோ, டவ்வ துறைவ தறிவு' என்று சொல்கின்றமையால் உலகத்தையொட்டிச் செல்ல வேண்டும் என்ற நிலையில் தமிழ்ச் சமுதாயம் இருத்தலால் இவ்வுண்மையை ஒப்புக் கொள்ளவேண்டும்.

தமிழ்நாட்டைப்பற்றி இன்னும் உலகம் அறிந்து கொள்ளாமல் குறை கூறுகிறது. ஏன், அண்டையிலுள்ள வடநாடுகூட அறியவில்லை. தபால் தலைகளில் கவிஞர்களின் உருவத்தைப் பொறிப்பதாக வடநாட்டரசாங்கம் அறிவித்திருந்தது. தாகூர், மீரா போன்றவர் இடம்பெற்றனர். உள்ளத்தை உருக்குகின்ற உயர்ந்த அறங்கூறும் ஞான நூலை ஆக்கித் தந்த மணிவாசகர் இடம் பெறவில்லை. திருவள்ளுவர் இடம்பெறவில்லை. இந்த நிலையில் நாம் விழிப்புடனிருக்கவேண்டும். என்பால் இதைப் பற்றிக் கேட்ட அன்பர்க்கு ஒன்று சொன்னேன். இதுபோல் அவர்கள் செய்து விடுவாராயின் அவைகளை வாங்கி நீங்கள் உங்கட்குப் பிடித்தமான தமிழ் நாட்டுக் கவிஞர் உருவங்களைப் பொறித்துவிடுங்கள் என்றேன். அம்முறையில் கம்பர், மாணிக்கவாசகர், திருவள்ளுவர் போன்றோரின் உருவங்களை அச்சிட்டுப் பயன்படுத்த ஒரு கூட்டம் முன்வந்திருக்கிறது. இதைப்போல் திருவள்ளுவர் கழகச் சார்பில் உள்ள மக்களும் தமிழ்நாட்டுக் கவிஞர் உருவப் படத்தைப் பொறித்து வடநாட்டினர்க்கு அனுப்புதல் வேண்டும். தமிழகத்தில் தோன்றி இலக்கியங்களை ஆக்கித்தந்த பேராசிரியர்களைப் போல், திருவள்ளுரைப்போல் யாரும் இல்லை. திருவள்ளுவர் கூறியதுபோல் அறிவுரையை அழுத்தந் திருத்தமாகக் கூறிய பெரும் புலவர் இல்லை.