பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இதுபோலவே உருகாதார் உள்ளத்தில் ஒரு புரட்சியை உண்டாக்கிய அருமையான அமுதமொழி திருவாசகம்போல் உள்ளத்தை மாற்றும் உணர்ச்சி வேறு எந்த மொழியிலும் இல்லை. இவ்வாறு பேசும்பொழுது உள்ளம் தன்னையுமறியாமல் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்கின்றது. ஆனால் பள்ளியில் படிக்கின்றபொழுதுகூட இந்நாட்டுக் கவிஞர் பெயர் சொல்லப்படுவதில்லை. பாண்டியன் வரலாறு, நெடுஞ்செழியன் வரலாறு இவைகளையெல்லாம் சொல்லிக் கொடுப்படுதில்லை. ஆனால் சிவாஜி வரலாறு இருக்கும் அதைப் படித்துத்தான் தீரவேண்டும். படித்தே தீருவான். சம்பந்தரை அறியமாட்டான். மத்துவாசாரியரைப் பற்றி அறிந்திருப்பான். இந்த நிலை அடியோடு மாறவேண்டும். அந்த உணர்ச்சி நம்மிடையே வளரவேண்டும். அப்படி வளர்ந்தால்தான் நாம் பெரும்பயன் பெறமுடியும். அவர்களும் நம் நாட்டுக் கவிஞர்களை விட்டுவிட்டு அச்சுப்போடத்தான் போகிறார்கள். நாமும் வாங்கத்தான் போகிறோம். ஆனால் அவர்கள் அச்சுப் போடுதற்கு முன்னே நாம் கம்பர், மாணிக்கவாசகர், திருவள்ளுவர் படங்களைப் பொறித்துவிட வேண்டும். இனி இந்த உருவங்களை தாமே பொறித்துவிடவேண்டும் என்கிற உணர்ச்சி ஊட்ட வேண்டும்.

கல்வியைப் பற்றிச் சிறிது சொல்வோம். கல்வியைப் பற்றி எத்தனையோ கருத்து. அவற்றையெல்லாம் விளக்க வேண்டும் என்ற ஆசையில்லை. ஒரு பேரறிஞர், "நீ சொல்லித்தரும் படிப்பு ஒருவனை மகாத்மாவாக்க வேண்டாம், மனிதனாகவாவது ஆக்கட்டும்" என்று சொல்கிறார். அந்த நிலையிலே அத்துணைப் பெரிய சிறந்த மனிதப் பண்புடையவராக வாழச்செய்ய வேண்டும் கல்வி, அப்படிச் செய்யாவிட்டால் அன்று திருவள்ளுவர் கண்ட பேய்க்கூட்டந்தான் வாழ்கிறது என்று பொருள். ஏன்? "உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா