பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறவழிகாட்டி

207


வைக்கப்படும்” என்றாரல்லவா? உலகம் அவரைப் பேய்க்கூட்டம் என்று சொல்கிறது. அப்பேய்க் கூட்டத்தை உற்பத்தி செய்யும் நிலையங்களாகப் பள்ளிகள் இருக்கின்றன. அந்த நிலையொழிந்து திருவள்ளுவர் விரும்புகின்ற நிலையில் கல்வி நிலையங்கள் பணி புரியவேண்டும். அப்படிப் பணிசெய்யும் போது திருவள்ளுவர் 'நிலையாமை' யைப் பற்றிக் கூறியதை நினைவுபடுத்தவேண்டும். நிலையாமையைப்பற்றிச் சொன்னால் அது நஞ்சாயிருக்கிறது என்று சிலர் சொல்கின்றனர். திருவள்ளுவர் என்ன கூறுகின்றார்? “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும், பெருமை யுடைத்திவ்வுலகு” என்று நிலையாமையை வற்புறுத்துகிறார். திருவள்ளுவர் 'இந்தவுலகில் வாழ்கின்ற நாம் வரையறை உணர்ந்தவர்கள் அல்லேம்' என்று சொல்கிறார். ஆகையால், 'நீ செய்யவேண்டும் என்று எண்ணியதை உடனே செய்' என்கிறார். காயமே இது பொய்யடா’ என்ற பாட்டைப் பாடவில்லை. செயல் முறையில் ஆற்றுப்படுத்தற்காகவே சொல்கிறார். இந்நிலையில் அப்படிப்பட்ட உணர்ச்சியை யூட்டவேண்டும்.

'தான் நாட்டித் தனாஅது நிறுத்தல்' என்ற நிலை புலவர்க்கு இயல்பாகவே உண்டு. திருவள்ளுவர் கண்ட துறவறம் இல்லறத்திற்குப் பிறகா? முன்னா? இது ஒரு பெரிய வாதம். சில பெரும் பேராசிரியர்களிடத்திற்கூட இந்தச் சர்ச்சை எழுந்திருக்கிறது. பிள்ளையவர்கள் 'இல்லத்திற்குப் பின்' என்று சொல்கிறார்கள். அது பற்றிச் சில கருத்துக்கள் சொல்ல வேண்டியிருக்கிறது. திருவள்ளுவர் இல்லறத்திற்குப் பெருமை கொடுத்திருக்கிறாரா என்றால் இல்லறத்தைவிடத் துறவறத்துக்குத் தான் பெருமை கொடுத்திருக்கிறார். கடவுளைப் பேசிய நாவால் உடனே 'நீத்தார் பெருமை’ பேசுகிறார். அதோடு மட்டுமன்று. துறவறத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அழுத்தமாகப் பேசுகிறார். "இருமை வகை தெரிந் தீண்டதும் பூண்டார், பெருமை பிறங்கிற்றுலகு"