பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று. "அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும், பிறன் பழிப்பதில்லாயின் நன்று” எனக்கூறி இல்லறத்திற்குத்தான் திருவள்ளுவர் பெருமை கொடுத்தார் என்று இல்லறத்தார் அனைவரும் தெரியாமல் சொல்வர். இதுபோல தெய்வத்தானாகாதெனினும் முயற்சிதன், மெய்வருத்தக் கூலி தரும்" என்றமையால் கடவுள் இல்லையென்று சொல்லிவிட்டார் என்பர் சிலர். பரிமேலழகர் 'அஃதும்' என்ற சொல்லுக்கு 'ஏனைத் துறவறம்' என்று வலிந்து பொருள் காட்டுகிறார். 'அஃதும்' அந்த இல்லறமும் என்று கொண்டு பெயரளவில் இல்லறம் நல்லதுதான்; அவ்வாழ்க்கை பிறன் பழிப்பதாக இல்லையானால் நன்று என்கிறார். திருஞான சம்பந்தர் காலத்தில் 'ஆலயந் தொழுவது சாலவும் நன்று' என்று சொன்னால் போதும். அந்த நிலை அன்று இருந்தது. இன்று அப்படிச் சொன்னாலும் போவதில்லை. இன்றைய நிலையில் 'கோயிலுக்கு உள்ளன்போடு போ' என்று சொல்லவேண்டும்.

இல்லறம் மட்டும் அறம் என்று எண்ணிவிடுதல் கூடாது. அஃதும் என்று சொல்கிறபோது அந்த இல்லறமும் என்று சொல்லவேண்டுமின்றி துறவறத்திற்குச் சென்று நுழைதல் கூடாது. திருவள்ளுவர் 'மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம், பழித்த தொழித்து விடின்' என்ற குறளில் 'பிறன் பழிக்க இயலாவண்ணம் துறவறநெறி நிற்க' என்று கூறியவர் ஈண்டும் அதே கருத்தைக் கூறவே மாட்டார். ஆதலால் இது பிறன் பழிக்காவண்ணம் இல்லற நெறி நிற்க என்ற கருத்தை வற்புறுத்த வந்ததேயாகும்.

திருவள்ளுவர் இல்லறத்தார்க்கு வீட்டின்பம் இல்லை என்று சொல்வார்போல் சொல்கிறார். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும், தெய்வத்துள் வைக்கப்படும்" என்றார். ஈண்டுத் தேவவாழ்க்கைதான். சொல்லப்படுகிறது. துறவு நிலையைச் சொல்லும்போது, "யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த