பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தோன்றுகிறது. "அருளென்னும் அன்பீன்குழவி" என்று குறள் கூறுகிறது.

உடலுயிர் வாழ்க்கை இடையீடின்றி நடைபெறப் பொருள் தேவை. அதாவது, உயிர் ஊர்ந்து செல்லும் உடலாகிய எந்திரத்திற்கு எரிபொருளாக, காருக்கு பெட்ரோல் போல, துய்க்கும் பொருள்களாகிய காய்களும், கனிகளும் தேவை. அதுபோல உயிர்க்கு அருள் தேவை.

அருளில்லார்க் கவ்வுலக மில்லை; பொருளில்லார்க்கு
இவ்வுலகும் இல்லாகி யாங்கு

என்று குறள் கூறுகிறது. அருள், அன்பின் முதிர்ச்சியில் தோன்றுகிறது. எந்த மொழியிலும் எந்தச் சமயத்திலும் அருள் நெறியே நெறியென உணர்த்தப்படுகிறது. உலகியலில் இருள் சூழ்ந்த நிலை துன்பத்தைத் தருகிறது. இருள் நிலையில் மேடும் பள்ளமும் தெரிவதில்லை. பழுதையும் பாம்பும் தெரிவதில்லை. எங்கும் செறிந்த இருள். இந்நிலையில் இருள் கடிந்து எழுகின்றது ஞாயிறு. ஞாயிறு எழுந்தவுடன் இருள் அகலுகிறது. உயிர்களுக்கு ஆன்ற அறிவும் ஆள்வினையும் தோன்று கின்றன். அதுபோலவே, அருட்சார்பு அற்றவர்கள் மனத்தில் இருட்செறிவால் நன்மையும் தீமையும் தெரிவதில்லை. அருளியலில் ஈடுபட்டவுடன் அறியாமை அகலுகிறது: மயக்கம் தெளிகிறது. தெளிவு பிறக்கிறது. தெளிவினுள் சிவம் பிறக்கிறது. அருள் தன்மையால் செடிகளையும் மரங்களையும்- பேணுபவன் - விலங்குகளைப் பேணுபவன் - பக்கத்தில் வாழும் மனிதர்களைப் பேணுபவன் - தன்னையும் பாதுகாத்துக் கொள்கிறான். ஆதலால், அல்லல் அவனை அணுகுவதில்லை. அவன் தன்னுயிர்க்கு அஞ்ச வேண்டியதில்லை. எல்லார்க்கும் தன்னுயிர் அருமையானதே. அதனாலன்றோ, அப்பர் அடிகளும் என்னினும் இனியன் என்று இறைவனைக் குறிப்பிட்டார். ஆனால், பலர்