பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




செடி கொடிகளை அன்பு காட்டி வளர்த்தால் உயிர் வாழ்க்கைக்குரிய காய்களும், கனிகளும் கிடைக்கும். குடம் குடமாகப் பால் கொடுக்கும் பசுவினுக்கு அன்பு காட்டினால் உயிர் வாழ்க்கைக்குரிய பாலமுதம் கிடைக்கும். உயிர்க்கு இன்றியமையாத தேவையான இன்பக் கிளுகிளுப்பாகிய மகிழ்ச்சியை மற்ற மனிதர்களிடத்தில் காட்டும் இனிய முகத்தாலும், கூறும் இனிய சொற்களாலும் திரும்பப் பெறலாம். ஆதலால் தன்னுயிரைக் காதலிப்பவன் செய்யக் கூடிய அறிவுடைய செயல், அருள் உள்ளம் கொண்டு பிற உயிர்களைப் பேணுதலேயாகும்.

மன்னுயிர் ஒம்பி அருளாள்வார்க் கில்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை

என்று திருக்குறள் ஒதுகிறது.

இயல்பாகவே உலகியல், அருள் என்ற அச்சிலே சுழன்று நடைபெறுகிறது. "ஒன்று எல்லாவற்றுக்காகவும், எல்லாம் ஒன்றுக்காகவும்” என்ற உயரிய தத்துவமே உலகியல் தத்துவம், விண்ணின்றிழியும் நீர்த்துளி! காய்கதிர்ச் செல்வனின் கதிரொளி தண்நிலவு! இலையால், மலரால், காயால், கனியால் வாழ்விக்கும் தாவர இனங்கள்! என்னே அருட்காட்சி! அருளின் மாட்சி! எங்கும் அருட்கூத்து! இன்பக் கூத்து! ஆனந்தக் களிப்பு! இதனை உணர்ந்தவர்கள் அருள் நாட்டம் கொள்வர்; அல்லவை செய்யார்.

இன்புறுத்தும் இயல்பில்லாதவர்க்குத் துன்புறுத்த உரிமை ஏது? ஆக்கும் திறனற்றோர் அழிக்கலாமோ? துன்புறுத்துபவர் துன்பத்திற்கு ஆட்படுவர்; நல்வினை இழப்பர்; கொடுவினை மேற்கொள்வர்.

நெருப்புப் பற்றி எரிகின்ற உடையினால் மானத்தை மறைத்தல் முடியுமோ? நஞ்சினால் செய்த பாவை நயப்புறும் இன்பம் தருமோ? நுனி மரத்தில் ஏறி, அடி மரத்தை