பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

225


வெட்டுதல் வாழும் வழியோ? அதுபோல உயிர்களுக்கு அல்லல் செய்தார் வாழுதல் அரிது என்று திருக்குறள் பேசுகிறது.

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்

என்பது குறள்.

ஈண்டுப் பொருள் என்பது வாழ்க்கையின் பயன் என்ற பொருளில் உய்த்துணர்வது அதிகப் பயனைத் தரும். மாணிக்கவாசகர் தமது பாட்டின் பொருள் இறைவனே என்றார். வாழ்க்கையின் பயன் இறையருள் பெறுதலேயாம். இதனை அப்பர் "வைத்த பொருள் நமக்கு ஆம்" என்று அருளிச் செய்துள்ளார். வாழ்க்கையின் குறிக்கோளும் பயனுமாகிய அருளை, அருள்வழிப் பெறுதலையே "கொண்டும் கொடுத்தும் பெறுதல்” என்று திருமுறை கூறும்.

அருளை மறந்து, தீமையும் செய்து ஒழுகுதல் அந்தோ பரிதாபம்! குளிக்கப் போனவன் குளிப்பதை மறந்து அங்குள்ள சேற்றைப் பூசிக்கொண்டதைப் போல இருக்கிறது. அதனாலன்றோ, சங்கச் சான்றோர் "நல்லது செய்தல் ஆற்றிராயினும், அல்லது செய்தல் ஒம்புமின்” என்று அறிவுறுத்தினர்! இளங்கோவடிகளும் "அல்லவை கடிமின்" என்று ஓதினார்.

அருள் உணர்விற் சிறந்து வாழ்வோருக்கு அல்லல் இல்லை. இதற்குச் சான்று, இந்த உலகில் ஏராளம் உண்டு. மணமிக்க மலர்களைத் தரும் செடிகளைப் பலர் விரும்பி வளர்க்கின்றனர். அன்றி அழிப்பார் யார்? இனிய காய்களைக் கனிகளைத் தரும் மரங்களை வெட்டியழிப்பார் யார்? ஒருவருமில்லை. அப்படியே யாராவது இருந்தாலும் உலகம் அவர்களை மானிடராக ஒத்துக் கொள்வதில்லை. அவர்களை உலகம் கீழான கயவர்கள் என்று ஒதுக்குகிறது.

தி. I I. 15.