பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதுபோலவே, அருள் உணர்வு உடையவர்கள் வாழ்வார்கள்; வாழ்விக்கப் பெறுவார்கள். காரணம், அவர்கள் வாழ்வில் ஞாலம் வாழ்கிறது.

அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி

என்பது குறள். நினைத்தொறும் இன்பம் தரும் திருக்குறள் இது.

வாழ்க்கையின் அகத்திலும் புறத்திலும் அருளாட்சி உடையோர் அல்லற்பட மாட்டார்கள். அவர்களை அவலம் அடையாது, இஃது உண்மை. முக்காலும் உண்மையென்று திருவள்ளுவர் சாதிக்கின்றார். இந்த உண்மைக்குத் திருவள்ளுவர் காட்டும் சாட்சி எது? காற்று வழங்கும் இந்தப் பெரிய உலகம் சாட்சி என்கிறார்.

இந்த உலகத்தில் வலிமையுடையார் - வலிமையற்றோர். அனுபவத்தின் இடையூறாக நிலத்தை அடைத்து எடுத்துக் கொள்ளுதல் உண்டு. தண்ணீரை அணைகட்டித் தேக்கித் தடுப்பது உண்டு. கதிரொளியையும் - தண்நிலவையும் தடை செய்ய அடைத்துச் சிறைப்படுத்தல் உண்டு. பார்த்திருக்கிறோம்; கேட்டிருக்கிறோம். ஆனால், காற்றை யாரும் அப்படித் தடை செய்ய முடியாது.

காற்று, வேலிகளுக்கும் சுவர்களுக்கும் அப்பாற்பட்டது. ஆண்டான் - அடிமை வேறுபாடுகளைக் கடந்தது. எல்லாருக்கும் காற்று எப்பொழுதும் காற்று! தேடிப் பெறுவதன்று; வலிய வந்து துணை செய்கிறது. முயற்சி செய்து காற்றுக் குடிப்பதில்லை. இயல்பில் நிகழ்கிறது. இதற்குக் காற்று வழங்கும் நிலவுலகம் சாட்சி. மனிதர்களின் கொடிய கரங்கள் இன்னமும் காற்றைத் தடை செய்யவில்லை. களங்கப்படுத்தவுமில்லை. அதுபோல, அருளாள்வார் வாழ்வித்து வாழ்வர்;