பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

229



பிறிதோரிடத்தும் "ஒன்றாக நல்லது கொல்லாமை” என்று வலியுறுத்துகிறது. தாயுமான அடிகளும், "கொல்லா விரதம் குவலயத்தில் ஓங்குக" என்று கூறினார். வள்ளல் இராமலிங்க அடிகள் வாடிய பயிரின் வாட்டமெல்லாம் கண்டு வாடினார். உயிர் பழக்கத்தின் வழிப்பட்டது. அது சில பொழுது துன்பத்தைப் பார்த்துப் பழகிவிட்டால் அதற்குத் துன்பத்தின் கொடுமை வழக்கமாகிவிடும். இங்ஙனம் வழக்கப்பட்டோர் சிலர் பிறர் துன்பத்திலேயே மகிழ்வதையும் வாழ்வதையும் பார்க்கிறோம்.

"ஈசனுக்கு அன்பில்லார் எவ்வுயிர்க்கும் அன்பில்லார்” என்பது திருமந்திரம். ஆதலால் உயிர்த்துன்பம் கருதிப் புலால் உண்ணலைத் தவிர்த்திடுக! சுவையினால் மட்டுமின்றிப் பயனாலும் சிறந்த காய்களைக் கனிகளை உண்க

காய்களும் கனிகளும் நமக்கு உணவின் பயனைத் தருவதோடன்றி அருளாட்சிக்கும் அரண் செய்கிறது. எல்லா உயிர்களும் ஈசன் தங்கியிருக்கும் திருவுடல் ஆதலால் அனைத்துயிர் போற்றும் தவம் மேற்கொள்க!

உயிர்களின் நலம் பேணுதலே சிறந்த வழிபாடு. அதுவே அருளின் மாட்சியும் ஆட்சியுமாகும். திருக்குறளின் அருள் நெறி போற்றுமின்! பேணுமின்!

மனக் கட்டுப்பாடு

தாயுமான அடிகள், "எத்தனை விதங்கள்தான் கற்கினும் கேட்கினும் யானெனும் அகந்தைதான் எள்ளளவும் மாறவில்லை" என்று இரங்குகிறார்கள். "மனம் அடங்கக் கற்றிலேன்" என்று அருளாசிரியர் புலம்புகிறார். உலகின் எல்லாப் பயிற்சிகளையும்விட மனத்தையடக்கும் பயிற்சியே சிறந்தது. உயிர் வாழ்க்கையின் பயன், "அதனை மேலானதாக மாற்றுவதே"யாகும். இதனை "இது அதுவாதல்" என்பர்.