பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இரும்பை உருக்கினால் அது எஃகு ஆகும். அதுபோலப் புன்புலால் வாழ்க்கையை அருளுணர்வு கொண்டு உருக்கினால் அது தவமாகும். நிலம் உழுதலின் மூலம் நெகிழ்கிறது. அவ்வழி பயனுடையதாகிறது. தங்கத்தை உருக்கினால் ஒளியுடையதாகிறது; அணிகலன் செய்யப்படுகின்றது. இரும்பை உருக்கினால் எஃகு ஆகிறது; உறுதிப்படுகிறது. உறுதியைத் தருகிறது. நெகிழ்ச்சியும் உருக்கமும் உறுதியும் உள்ள இடத்தில் இறைவன் விளங்கித் தோன்றுகின்றான்.

தமக்கு வந்துற்ற நோயினைக் கண்டு பதறாமல் ஏற்று மகிழ்வுடன் அனுபவித்தல், பிற உயிர்களுக்கு எந்த வகையாலும் துன்பம் செய்யாதிருத்தல் ஆகியவை தவத்தின் அடையாளம்.

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு

என்பது குறள். உற்றநோய் நோன்றல் மனத்தால் செய்யும் தவம். உயிர்க்குறுகண் செய்யாமை உடலால் செய்யும் தவம். அகமும் புறமும் ஒத்த தவமே சிறந்த தவம். எல்லாக் கதவு களையும் அடைத்தாலே பொருட் பாதுகாப்பு உண்டு. ஒரு கதவினை அடைத்துப் பிறிதொன்றை அடைக்காது விடின், பொருட் பாதுகாப்பு இல்லை. இஃது யாவரும் அறிந்த உண்மை. இதே போல் பொறிகள் ஐந்து புலன்கள் ஐந்து ஆகிய அனைத்தையும் அடைத்து ஒன்றியிருந்து உத்தமன் திருவடிகளை நினைந்தாலொழியத் தவம் கை கூடுவதில்லை.

துன்பம் உயிரைச் சுடுவதில்லை. உயிரைப் பற்றியிருக்கின்ற குற்றத்தினையே சுடும். மருத்துவர் கட்டியினை அறுப்பர் கையினை அறுப்பதில்லை. திருவண்ணாமலை ஆதீன முதல்வர் தவஞானச் செல்வர்மீது "அடியார் தினம் தினம் செய்த பிழை பரியாது அறுத்துச் சுடுவதெல்லாம்