பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

235


வறியவர்களேயாம். அதனாலன்றோ "செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” என்று சான்றோர் அறிவுறுத்தினர்.

தவம் செய்வோருக்கு நிறைநலம் மிக்க ஒழுக்கம் வேண்டும். சிலர் பழக்கத்தினால் புறத்தேயுள்ள ஐம் பூதங்கள்-அதாவது நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் இவற்றில் உடலைப் பழக்கி அவற்றினாலாய துன்பத்தினில் வெற்றி பெறுவர். அதாவது நீரில் பலகால் தோய்தல், நிலத்தில் கிடத்தல், நெருப்பில் நடத்தல், விண்வழிச் செல்லுதல், வளியின் திசையினை மாற்றுதல் ஆகிய சாதனைகளில் வெற்றி பெறுவர். ஆயினும் அகத்துறுப்புகளில் ஒட்டியிருக்கும் ஆசை நீங்காது வாழ்வர். இவர்தம் எளிய நிலையினைப் பார்த்து அவர்தம்முள்ளே ஒன்றித்துக் கலந்து நிற்கும் ஐம்பூதங்கள் நகைக்குமாம் என்பதனை,

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

என்றார் திருவள்ளுவர். தவத்திற்குப் பொதுவாக மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உண்டு. ஆதலால், முறையாக வாழும் திறனற்றவர்கள் உலகியல் வேட்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தவவேடத்தினை மேற்கொள்வர். இதனைத் திருவள்ளுவர் மிகவும் கடுமையாகக் கடிந்துரைக்கின்றார்.

பசு, புலித்தோலைப் போர்த்துக்கொண்டு மேய்தல் போன்றது, தவவேடம் பூண்டோர் பாமர மக்களை வஞ்சித்துக் காணிக்கை என்ற பெயரால் காசுகளைப் பறிப்பது. புதரில் மறைந்து நின்று ஒன்றுமறியாத புள்ளினை வீழ்த்துகிறான் வேடன். அதுபோலக் கயவன் தவவேடத்தில் மறைந்து ஒன்றுமறியாத பாமரமக்களைத் தன் வலையில் வீழ்த்துகின்றான் என்று திருவள்ளுவர் கண்டிக்கிறார். பற்றற்றார் போலக் காட்சியளித்து பற்று நீங்காதவர்கள்