பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாவம் செய்கிறார்கள். அப்பாவத்தால் பின்னை இரங்கிக் கவலைப்படுவதற்கு உரியராகின்றனர் என்பதை,

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவும் தரும்

என்று திருக்குறள் கூறுகிறது. புறத்துறவு எளிதில் கை கூடக்கூடிய ஒன்று. அதாவது புறத்துறவு என்பது கோலத்தினைக் காட்டுவது. சில திங்கள் வாளா வாழ்ந்தாலே உடல், துறவுக் கோலத்தையடையும். அவர்கள் வலிய மழித்தலோ, அன்றி நீட்டலோ செய்ய வேண்டிய அவசியமில்லை. தாமேயே பேணுதலின்மையால் உரோமங்கள் உதிர்தலுமுண்டு. தாமே வழுக்கைத் தலை வீழ்தலை இன்றும் பார்க்கின்றோம். சிலபொழுது முறையாக நீக்குவன நீக்கித் துய்மைப்படுத்தாமையின் காரணமாக நீளுதலையும் பார்க்கின்றோம். திருவள்ளுவர் உடற்பற்றுக் குறைந்து ஒழுக்கத்திற் சிறந்து விளங்கும் பொழுது தாமே நீளுதலையும் மறுக்கவில்லை. வலிய வேடம் கருதி முயற்சி மேற்கொண்டு மழித்தலையும் நீட்டலையும் மறுக்கின்றார். இதனை,

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்

என்பதனால் அறியலாம்.

விளக்கு எரிகிறது. சுடர்விட்டு எரிகிறது. ஆயினும் அதன் நடுவே ஒரு கறுப்பு உண்டு. அதுபோல, பொய்த் தவவேடம் பூண்டு, மனத்தில் கறுப்பு வைத்து வந்தான் என்று முத்தநாதன் வருகையைச் சேக்கிழார் வர்ணிக்கிறார்.

திருவள்ளுவர் இதனைக் காட்சியினாலே விளக்குகின்றார். குன்றிமணி நல்ல சிவப்பு நிறமுடையது; ஆயினும், அதன் மூக்கில் கறுப்பு இருக்கிறது. அதுபோலத் தவவேடத்தில் அகம் கறுத்த மனிதர்கள் வாழ்வதைத்