பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

237


திருவள்ளுவர் நொந்து கண்டிக்கிறார். வடிவத்தால் செவ்விய தன்மையைத் திருவள்ளுவர் எதிர்பார்க்கவில்லை. உள்ளத்தினாலேயே எதிர்பார்க்கிறார்.

அம்பின் வடிவம் நேரானதே ஆயினும் அதனால் விளையும் பயன் கொடிதே. யாழின் வடிவம் கோணலானது. ஆயினும் பயன் பலர்கேட்டு மகிழும் இசையமுது. ஆதலால், வேடத்தால் பயன் இல்லை. நெஞ்சால் துறந்து, துாயதவம் இயற்றுதலே உண்மையான தவம். தவம் செய்யும் இயல்பினரல்லாதோர், நாடகத்தால் அடியார்போல் நடிப்பது நாட்டுக்குக் கேடு. மனிதகுலத்துக்குத் தீங்கு என்பது திருக்குறள் முடிவு. திருக்குறள் காட்டும் தவநெறி பெருகி வளர வேண்டும். இதுவே நம் பிரார்த்தனை!

மனத் தூய்மை

னத்தூய்மை, நல்லொழுக்கம், தவம் முதலியன ஒரு நாளில் பொருந்திவிடுவன அல்ல. பல்வேறு நல்லியல்புகளை ஏற்று, வாழ்க்கையிற் செயற்படுத்தி உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலமே அவை வாய்க்கும். கள்ளாமை என்ற நல்லொழுக்கத்தைத் திருவள்ளுவர் விரித்துரைக்கிறார். ஒழுக்கத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அல்லது வீழ்ச்சிக்கும், உள்ளமே அடிப்படை உள்ளத்தில் தோன்றிய ஒன்று அது நல்லது ஆனாலும் சரி, கெட்டது. ஆனாலும் சரி, உடனடியாகச் செயலுக்கு வராது போனாலும் காலப் போக்கில் செயற்பட்டு அதற்குரிய பயனைத் தந்தே தீரும். இதனை,


உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வேம் எனல்

என்று திருக்குறள் கூறுகிறது.