பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

239


கொள்ளலாம். ஆனால் ஊக்கம், உழைப்பு, ஆற்றல் நிறைந்த முயற்சி ஆகியவற்றுடன் பொருள் வருமானால், பொருள் கழிந்தாலும் இந்த இயல்புகள் நம்மிடத்தே தங்கி நின்று மீண்டும் பொருளைக் கொண்டுவந்து சேர்க்கும். களவு வீழ்ச்சிக்கே வழி. இந்த வழியை நாடுபவர் பொருளினால் மட்டுமல்ல. அவர்களது உடல் வாழ்க்கையும்கூட ஒறுக்கப்படும். களவில் விளைவுகள் மட்டும் துன்பமல்ல, களவு செய்தலும் துன்பவினையேயாம். ஆனால் நேரிய வழியில் பொருளீட்டுதற்கு எளிய, இனிய வழிகள் பலப்பல உண்டு. அதனால்,

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்”


என்று கூறுகிறது குறள்.

வாழ்க்கையை இரண்டு உந்துசக்திகள் வழி நடத்திச் செல்லவேண்டும். அந்த இரண்டு சக்திகளும் வெவ்வேறாகத் தோற்றம் அளித்தாலும், தம்முள் ஒன்றுபட்டனவேயாகும். ஒன்றிலிருந்து ஒன்று தோன்றும்; தோற்றத்திலிருந்து மேலும் வளரும். ஒன்றையொன்று தழுவியே நிற்கும். இந்தச் சக்திகள் அறிவு என்றும், அனுபவம் என்றும் அழைக்கப்பெறும். அறிவில் அனுபவம் விளைகிறது. அனுபவத்தில் அறிவு விளைகிறது. இந்த இரண்டு சக்திகளையும் முறையாகப் பற்றி நெறியில் நின்று வாழ்பவர்கள் வாழ்க்கையின் வரம்புகளை அறிவார்கள். அவர்கள் நெஞ்சத்தில் அற உணர்வு நிலை பெற்றிருக்கும். இதேபோலக் களவுடையார் மாட்டு வஞ்சனை நிலைபெற்று நிற்கும்.

அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சிற் கரவு


என்று திருக்குறள் கூறுகிறது.