பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

243


வரையறுத்துக் கூறுகிறது. நெருப்பு மட்டுமா சுடுகிறது? நெருப்பு இருக்குமிடமும் சுடும். அதுபோலத் தீமை தங்கியுள்ள நெஞ்சும் சுடும். உள்ளத்தாலே ஒழுகுதலே ஒழுக்கம். "உள்ளத்தால் பொய்யாதொழுகின் உலக"த்துக்கு நன்மை விளையும்; உலகத்தின் பல்லுயிர்களும் வாழும். ஆதலால் உள்ளத்தால் பொய்யாதொழுகுவோரின் பருவுடல் அழிந்தாலும் அவர்கள் உலகத்தவருடைய உள்ளங்களில் புகழுருவத்துடன் உலவுவர். இதனை,

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்


என்று கூறி விளக்குகிறது குறள்.

உள்ளத்தால், செயலால் நன்மை நாடும் வாய்மை ஒழுக்கம் மேற்கொண்டொழுகினாலே போதும். உடம்பினை வருத்தும் தவங்கள் செய்ய வேண்டா, ஆரவாரத் தன்மையுடைய அறங்களைச் செய்ய வேண்டா. உடலின் தூய்மை தண்ணீரால் கழுவுவதின் மூலம் கிடைக்கிறது. இன்று கழுவினால் தூய்மையாக இருக்கும். ஆனாலும் நாளை தூய்மை குறையும். மீண்டும் கழுவித் தூய்மை செய்துகொள்ள வேண்டும்.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்


என்பது குறள். உடல் துய்மையைத் தொடர்ந்து கவனித்து அடிக்கடி கழுவித் தூய்மை செய்துகொண்டு, தனக்கும் பிறருக்கும் மகிழ்வைத் தரக்கூடிய வகையில் வாழ்வதைப் போல, வாய்மையால் அடிக்கடி நினைந்து நினைந்து மனத் தூய்மையைப் பேணிக் காப்பாற்றுதல் வேண்டும்.

புறத்தே கிடக்கும் இருளை நீக்கிக் காட்சி தருவது ஒளிவிளக்கு விளக்கின் துணைகொண்டே பொருள்களைப் பகுத்துப் பார்ப்பர். சான்றோர், கையில் விளக்குக் கொண்டு