பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

245


ஓங்கி அறைந்தால் நிலத்திற்கு நோவில்லை; கைக்கே வலி, வலியோடு மட்டுமல்ல, கையொடிந்தாலும் ஒடியும். அது போல ஒருவர் சினத்தால் பிறருக்கு விளைவிக்கும் தீமையை விட அவர் பெறும் தீமையே அதிகம் என்பதனை,

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று


என்று கூறுகிறது.

ஆதலால் சினத்தினைத் துறந்து பெரிய துறவியாகச் சொல்கிறார் திருவள்ளுவர். தவத்திற் சிறந்தோர் பலர் சினத்தால் தம்மையும் தவத்தையும் இழந்த வரலாறுகள் ஏராளம் என்பதனை உணர்த்தி, வெகுளியிலிருந்து விலகச் சொல்கிறார்.

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை


என்பது குறள். வெகுளாமல் இருக்க முடியவில்லையே என்ற குறையிருக்கலாம். பலர் வேண்டுமென்றே நமக்குத் தவறுகளையும், துன்பங்களையும் இழைத்துக் கோபத்தை மூட்டலாம். இதனைக் காரணம் காட்டிக் கோபத்தை நியாயப்படுத்தக் கூடாது. அதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் கோபம் தம்மை வந்து பொருந்தாமல் காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை.

இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று


என்று கூறுகிறது, குறள்.

வெகுளியைத்தொடர்ந்து தோன்றும் தீயொழுக்கம், இன்னா செய்தல், பிற உயிர்களுக்குத் தீமை செய்யாதொழுகுதலே அறிவுடைமையாகும்; பேரறமுமாகும். இதனை,