பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

251


கடைசியில் இன்றுமில்லாமல் பிணமாகும் நிலை ஏற்படுகிறது. ஆதலால் இந்த உணர்வைத் திருவள்ளுவர் எவ்வளவு எளிமையாக, ஆனால் உணரக்கூடிய வகையில் உணர்த்துகிறார்! இதனை,

நாள்என ஒன்றுபோல் காட்டி உயிரீரும்
வாளது உணர்வார்ப் பெறின்

என்று குறள் கூறுகிறது. நாள்களை அவமே வீணாக்காது, பிறப்பின் பயனை அடைய முயலவேண்டும்.

"காற்றுள்ளபொழுதே தூற்றிக் கொள்” என்பது பழமொழி. இந்தப் பழமொழி இன்றைய உலகியலில் தவறான கருத்தில் வழங்கப்பெற்றாலும், இந்தப் பழமொழிக்குச் சிறந்த தத்துவப் பொருள் உண்டு. அதாவது உயிர் உடம்பொடு புணர்ந்து இயங்கும்பொழுதே அதற்கு இயக்கம் உண்டு; சிந்தனை உண்டு; செயல் உண்டு. உடம்பொடு உயிர் புணர்ந்து நிற்பதற்குச் சாட்சி, விடும் மூச்சுக் காற்றேயாம். அந்த மூச்சுக் காற்று இருக்கும்பொழுதே தீமையைத் தூற்றிவிட்டு, நன்மையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே இதன் பொருள். ஆதலால் நிலைத்தல் நிலையாமை தெரிந்து, துன்பத் தொடக்குடைய பொருள்களைத் துறந்து, இன்பத்தினை யடைதல்வேண்டும். "ஈறிலாப்பதங்கள் யாவையுங் கடந்த இன்ப அன்பினை" யடைய ஒரே வழி "யான்" என்ற அகப்பற்றும் "எனது” என்ற புறப்பற்றும் நீங்குதலேயாம். இதனை.

யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும்

என்ற குறளால் அறியலாம். அவா என்பது அரைக்கீரை போன்றது. அரைக்கீரை கிள்ளக் கிள்ளத் துளிர்க்கும். அதுபோல, அவா ஒன்றையொன்று தள்ளிக் கொண்டு அடர்ந்து எழுந்துவரும். "அவா வெள்ளக் கள்வனேனை"