பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இயல்பாக ஆணவம் என்ற அழுக்கைச் சார்ந்திருக்கிறது. இந்தச் சார்பின் காரணமாக உயிரின் அறிவு மயங்குகிறது; பேதைமை அடைகிறது. இதனை, உயிர் உணர்ந்து இந்தச் சார்பைக் கெடுத்து, தனக்குவமையில்லாதானாக விளங்கும் இறைவனோடு சார்பு ஏற்படுத்திக் கொண்டால், உயிர் அறிவு நலம் பெறுகிறது; வளர்கிறது. வாழ்கிறது; உய்தி பெறுகிறது. இதனை,

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்

என்று தெளிவுபடுத்துகிறது. அதனால், பேதைமை நீங்க வேண்டுமா? பேதைமையின் காரணமாகச் சங்கிலித் தொடர்போல வரும் பிறவித் துன்பங்கள் ஒழிய வேண்டுமா? என்று ஆராய்வது அறிவுடைமை. இதனை ஆராய்ந்து பல் வேறு சிறப்புகள் அனைத்திலும், சிறந்த, 'சிறப்பு' என்றே பேருடைய செம்பொருளைக் காணுதல் வேண்டும்.

சில பொருள்கள் எதில் ஊறுகின்றனவோ அந்தப் பொருளின் தன்மையை-சுவையைப் பெறும். அது போல உயிர் எதை நினைக்கிறதோ அல்லது எண்ணுகிறதோ, அவ் வழியாக அது ஆகும். இதனையே இன்றைய உளநூலோர் "எண்ணியபடியே வாழ்க்கை" என்று கூறுகின்றனர். இதனை,

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு

என்ற குறளால் உணர்க.

செம்பொருள் காணும் முயற்சிக்கு ஐயம் ஒரு பெரிய தடை அறியாமையைக்கூட மன்னிக்கலாம். ஆனால், ஐயத்தை அனுமதிக்க முடியாது. காரணம் இதுவோ, அதுவோ என்ற ஐயப்பாட்டிலேயே உழலச் செய்து உருக்குலைக்கிறது. எந்த ஒன்றிலும் துணிந்து இறங்க முடியாமல் தடுக்கிறது.