பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

255



அறியாமை, பேதைமை இருந்தாலும் அனுபவத்தால் மாறும். ஆனால் ஐயமோ, அனுபவத்திற்கே தடை ஆதலால், பேரின்ப வாயில் நுழைவுக்கு முதலில் ஐயம் நீங்க வேண்டும். பின் தெளிவு தேவை.

ஐயம் நீங்கித் தெளிவு தோன்றின் பேரின்பம் எளிதில் கிடைக்கும் என்பதை வள்ளுவர் நயம்படக் கூறுகிறார். ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு, மண்ணுலகத்தைவிட விண்ணுலகமே பக்கத்திலிருப்பதாகக் கூறுகிறார்.

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நனிய துடைத்து

என்பது குறள்.

உடலும், உயிரும் இயைந்து ஒன்றுபட்டு உலாவும் பொழுது தங்கியிருக்கும் இடத்திற்கே வீடு என்று பெயர். வீடு என்ற சொல் விடுதல் பொருள் உணர்த்தும் சொல்.

குடியிருக்கும் வீட்டுக்கு, வீடு என்று. பெயர் வந்தது எப்படி? சிலருக்குப் பலகாலும் பயிலும் வீட்டில் படுத்தாலே தூக்கம்வரும். சிலருக்கு வீட்டைவிட்டு வெளியே இருப்பது அமைதியைத் தராது. அது மட்டுமின்றி, கடும் கோடை வெயில், வருத்தும் பனி, கொடிய விலங்குகளின் பகை ஆகியன தரும் துன்பத்திலிருந்து, விடுதலை தந்து-இன்பம் தருவதால் வீடு என்று பெயர் பெற்றது.

இத்தகைய ஒரு வீடு சொந்தத்தில் இல்லாதவர்கள் மிகவும் குறைப்படுகிறார்கள்; துன்பப்படுகிறார்கள். குடியிருக்க வீடுகூட இல்லையே என்று கவலைப்படுகிறார்கள். சொந்தத்தில் வீடு இல்லாதவர்கள் இயல்புக்கேற்ப வாடகை வீடுகளில் குடியிருக்கிறார்கள். வாடகை வீடுகளில் குடியிருப்பது வசதியாக இருப்பதில்லை; மேலும் துன்பமுமாம். வாடகைக்கு வீட்டைத் தந்திருக்கும் வீட்டின் சொந்தக்காரர்களுக்கு வாடகையைப் பற்றிக் கவலையே