பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


துன்பமும் பெறலாம். இவ்விரண்டிலும் உயர்ந்த அழிவின் பத்தையும்- அதாவது பேரின்பத்தையும் பெறலாம். இறைவனை, செல்வங்களை வேண்டிப் பூசை செய்யின் செல்வ விருப்பம் நல்லூழாக- ஆகூழாகத் தோன்றிச் செல்வத்தைத் தரும்.

வாழ்க்கையின் விருப்பம் ஓர் அத்தியாயமாக நின்றுவிடுவதில்லை. வாழ்க்கையின் விருப்பம் பல அத்தியாயங்களைத் தொடரும்; ஏறும்; விகார உணர்ச்சிகளால், பற்று-பாசங்களால் ஆகூழ் போகூழாக மாறிவிடுவதுண்டு. ஆகூழின் பயனாகிய செல்வத்தை அடைந்து அனுபவிக்கும்பொழுது, பற்றுவிடா உணர்ச்சியும், "எனது” என்ற இறுமாப்பு உணர்ச்சியும் இருத்தல் கூடாது.

மற்றவர்களுக்குத் தீங்கு செய்யக்கூடிய சக்திகளை வேண்டியும் பூசை செய்யலாம். இங்ஙனம் வேண்டிப் பெற்றவர்களே அசுரர்கள். தவத்தில் சுரர் என்றும், தன்மையினால் அசுரர் என்றும் உணர்த்தவே அசுரர் என்றார். இத்தகைய பூசையால் விளைவது தீயூழ். எதுவும் கருதாமல், இறைவனையே கருதிப் பூசித்தல் வினைச்சார்பற்றது; இன்பம் தருவது.

உயிர்கள் வினை செய்தல் இயற்கை வினை செய்தலே உய்தற்குரிய வழியாதலால் வினை செய்தலைத் தவிர்க்க முடியாது; தவிர்க்கவும் கூடாது. இறைவன் நன்றுடையான்; தீயதில்லான்; அவனுடைய படைப்புகள் இன்பம் விளைவிப்பனவாம். ஆதலால் நம்முடைய துன்பங்கலந்த இன்பங்களும் துன்பங்களும் நம்முடைய படைப்புகளே-தவிர இறைவனுடைய படைப்புகளல்ல.

நம்முடைய தலைவிதியை நாமே எழுதிக்கொள்கிறோம். கடவுள் நியதி என்ற முறையமைப்பில் அவரவர் தாம் செய்த விளைவுகளுக்கேற்ப வினைப் பயனை