பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

267


மறந்தும் தவறு செய்யாத திருவருட்சார்பைத் துணையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதே ஊழினை வெற்றி பெற முடியும். ஊழினை வெற்றி கொள்வதென்றால், ஊழின் வழியதாக வரும் இன்ப துன்பத்தால் தாக்கப் பெறாமல் அலைக்கழிக்கப் பெறாமல் அனுபவிப்பது என்பதேயாகும்.

யாரொருவரும் அவரவர் உண்ட உணவை அவரவரே செரிக்கச் செய்து கொள்ள வேண்டும். இதுவே நியதி. அது போலவே யாரொருவரும் தாம் தாம் சிந்தனையால், உணர்வால், செயல்களால் செய்த செயல்களின் பயன்களை அனுபவிக்கவேண்டும். இங்ங்ணம் அனுபவிக்க வேண்டுமென்ற நியதிதான் ஊழ் ஆகும். ஊழ் மனிதர்களாலேயே தோற்றுவிக்கப்பெற்றது. மனிதன் சிந்தனையால், உணர்வால், செயலால் உயர்ந்து தன்னலப் பற்றின்றிக் கடமைகளைச் செய்யும்பொழுது ஊழ் கழிகிறது; உறுதியும் பயனும் விளைகிறது; அழிவில் இன்பம் தோன்றுகிறது; இதுவே திருக்குறள் உலகத்தின் கருத்து.

குடிமை

ரு மனிதன் தான் வாழும் சமுதாயத்துக்கும் நாட்டிற்கும் ஏற்றவாறு ஒழுகும் இயல்பினைக் குடிமை என்று சிறப்பித்துக் கூறுவர். குடிமைப் பயிற்சி, குடிமைப் பண்பு (Citizenship) என்றெல்லாம் பேசப் பெறுவதும் இந்த இயல்பேயாகும். பழங்காலத்தில் நாடு, சிறிய அமைப்புகளேயாம். அன்று பெரும்பாலும் குல அடிப்படை சிறப்புற்றிருந்தது. இன்று நாடு என்ற அமைப்பு விரிந்தும், பரந்தும் விளங்குகிறது. ஆதலால் குலம் என்ற அடிப்படை மறைந்து, நாடு என்ற பேரமைப்புத் தோன்றியுள்ளது. ஆனாலும், பாரதி, பாரத நாட்டு மக்களை பாரத ஜாதி என்றே அழைத்தான்.