பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஊக்கமிகுதியே பெருமைக்கு அடிப்படை செயலும் சாதனையுமின்றி உண்டுடுத்து வாழ்வோம் எனக் கருதுதல் இகழ்ச்சி பொருந்திய வாழ்க்கை.

பெருமை, பிறர் கொடுக்க வருவதா? அல்லது கடைகளில்-சந்தைகளில் கொள்முதல் செய்யும் விலைச்சரக்கா? இல்லை! பெருமை, தானே முயன்று பெறக்கூடிய ஒன்று. மகளிர் மனம் மெல்லியது; கவர்ச்சிகளுக்கு ஆட்படக்கூடியது. அதுபோலவே, மற்றவர்களைத் தன் கவர்ச்சியால் தன் பால் ஈர்க்கக் கூடியது. ஆனால், இந்த மென்மையில் திண்மை ஒன்று வேண்டும். அதுதான் கற்பு. மென்மையும் கவர்ச்சியும் இழுக்குடையன அல்ல. ஒரு மனம் கொண்டு, ஒழுகுவோர், ஒழுக்கமெனும் கற்பும் இலட்சிய வேட்கையும் கொண்டு ஒழுகுவோர் பெருமையைப் பெறுவர். இதனை,

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு

என்றார் வள்ளுவர்.

பெருமை சாதாரணச் செயல்களால் கிடைக்கக் கூடியதன்று. அதற்கு அதிக விலை கொடுக்கவேண்டும். சிலர் எளிய-சாதாரணக் காரியங்களைச் செய்து விட்டுக்கூடப் பெருமையை எதிர்பார்க்கின்றனர். ஏன்? சிலர் மாடிவீட்டில் பிறந்ததற்காகப் பெருமை கேட்கின்றனர். சிலர் உடுத்தியுள்ள உடைகளுக்கும் அணிகலன்களுக்கும் பெருமை கேட்கின்றனர். சிலர் கொண்டுள்ள கோலங்களுக்கும் பெருமை கேட்கின்றனர். சிலர் பெற்றுள்ள அதிகாரங்களுக்குப் பெருமை கேட்கின்றனர். ஏன்? சிலர் ஒன்றுமில்லாமலே பெருமையை எதிர்பார்க்கின்றனர்.

பெருமையென்பது கேட்டுப் பெறுவதும் அல்ல. கொடுத்துப் பெறுவதும் அல்ல. அது சாதனையில் பிறப்பது. பெருமையின் நாட்டமுடையோர் சோதனைகளை ஏற்பர்;