பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

281


தாலும்தோல்வியை ஏற்றுக்கொள்வர். அங்ஙணம் ஒப்புக் கொள்ளுதல்தான் சால்பினை உரைத்துக் காட்டும் ஒழுக்கமாகும். இதனை,

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்

என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

தமக்கு இனியன செய்தார்க்குத் திரும்ப இனியன செய்தல் ஒருவகை வாணிகமேயாம். வாழ்க்கை நைப்பாசைகளில் ஊறியோர் இனியன செய்தார்க்கு இனியன செய்வர். இஃது ஒன்றும் பாராட்டுக்குரியதல்ல. இன்னாதன செய்தார்க்கும் இனியன செய்தலே வாழ்க்கையின் சிறப்பும் பெருமையுமாகும். அங்ஙனம் செய்தலே சால்புடைமையின் பயன்.

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்:
என்ன பயந்ததோ சால்பு

என்பது குறள். வறுமை முதலியன சாதாரண மனிதரை அழிக்கும். ஆனால், சான்றோருக்கு வறுமை இழிவன்று. சான்றோர் தம்முடைய சால்பொழுக்கத்தில் உறுதியுடன் இருப்பாராகில் வறுமை, அழிவையோ இழிவையோ தராது. இதனை,

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்

என்பதால் அறியலாம். ஊழி பெயர்தல் முதலிய துன்பங்கள் வந்துற்றாலும், சான்றோர் தம் ஒழுக்கத்தினின்றும் மாறமாட்டார்கள்.

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்