பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

289


நம்முடைய தலைமுறையில் அண்ணல் காந்தியடிகள் பகையும் போரும் நீக்கிப் பண்பாட்டு வழியில் நம்மைச் செலுத்தினார். இத்தகு பண்புடையோர் இருப்பதனாலேயே இந்த உலகம் நிலைபெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனை, "உண்டாலம்ம இவ்வுலகம்" என்று புறநானூறு போற்றுகிறது.

நிலத்திற்குத் தனியே இயல்புண்டு. ஆயினும் அந்த இயல்புகள் ஏற்றம் பெறுதலும், பயன்படுதலும் மனித ஆற்றலின்பாற்பட்டது. உணர்விழந்த, செயலிழந்த மனிதர்கள் கையில் சிக்கிய நிலம் செழுமையானதாயினும் பயன்படாது. உணர்வும், செயலூக்கமும், திறனும் பெற்ற மனிதர்கள் கையில் பயனற்ற களர்நிலம் சிக்குமாயினும் வளங் கொழித்துப் பயன்படும். ஆக, வளமும் பயனும் நிலத்திலா? மனிதனின் உழைக்கும் தன்மையுள்ள கரங்களிலா? உழைக்கும் திறம்படைத்த கைகளிலேயே மனித உலகத்தின் உயிர் வாழ்க்கை தங்கியிருக்கிறது; வாழ்கிறது; "கைவருந்தி உழைக்கும் நீ தெய்வம்" என்றார் பாரதியார். இதுவும் பண்பாடு. இந்தப் பண்பாட்டின் அடிச்சுவட்டிலேயே உலகம் வளர்கிறது; வாழ்கிறது; நிலைபெற்று இயங்குகிறது. இத்தகு பண்பாளர்கள் எண்ணிக்கையில் சிலரேயாக இருக்கலாம். ஆயினும், இவர்களாலேயே உலகம் வாழ்கிறது. இவர்கள் இல்லையானால், உலகம் மண்ணோடு மண்ணாகப் போயிருக்கும். இதனை,

பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்

என்ற திருக்குறளால் அறிக.

"ஒன்று பரம்பொருள், நாம் அதன் மக்கள் உலகின்பக்

தனி" என்ற வாழ்க்கையின் பண்பாட்டுச் சுருதியை நாம்

தி.II.19.