பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

291


வாழ்க்கை பயனற்றுப் போவதால் இறந்தவர்களாவர். பயனுடைய வாழ்க்கையே வாழ்க்கை, இதனையே குறள்,

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில்

என்று கூறி விளக்குகிறது.

திருவருளால் கிடைத்த பிறப்பே உயிர்க்கு மருந்து. ஆனால், இறைவன் விதித்த நெறிமுறைகளாகிய பத்திய வாழ்க்கையை மேற்கொள்ளத் தவறினால், மீண்டும் மீண்டும் செத்துப் பிறக்கும் அவலத்திற்கு ஆளாக நேரிடும். பொருள் சக்தி படைத்ததுதான். ஆனாலும் தனியே பொருள் ஒன்றும் சாதிக்காது. ஆனால், அதனைப் பெற்றவன் உலகத்தில் எதையும் சாதிப்பான். ஆயினும் பொருளுடைமையினாலேயே எல்லாம் ஆகிவிடாது. பொருளைப் பயன்படுத்தும் வகையினாலேயே அமையும்.

வாழ்க்கையின் பயன் நோக்கியே பொருளை ஈட்டத்தொடங்குகின்றனர். ஆனால், பொருள் கையில் புழங்கத் தொடங்கியவுடன் பொருளின் பயனைவிடப் பொருளுக்கே முதன்மையான இடத்தைக் கொடுத்து, தாமும் துய்க்காமல் மற்றவர்களுக்கும் கொடுத்து மகிழாமல், பொருளை இவறிக் கூட்டிப் பாதுகாக்கத் தொடங்கி விடுகின்றனர். இதனால், மனிதன் பொருளின் பயனை இழப்பதோடு துன்பத்தில் சிக்கி, தன் ஆன்மாவைத் தானே தற்கொலை செய்து கொள்ளுகிறான். இதனால், பிறப்பு நீங்கக் கிடைத்த பிறப்பு மீண்டும் மயக்கத்தோடு கூடிய பிற்ப்பையே உண்டாக்குகிறது.

பொருளான்ஆம் எல்லாம்என் ரீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு

என்ற குறள் இதனை விளக்குகிறது.