பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



உலகியலில் செல்வத்துக்கும், ஆடம்பரத்துக்கும் மதிப்பு இருக்கிறது. வெறும் செல்வமுடைமைக்குத் தரப்பெறும் மதிப்பே சமுதாயத்தின் ஒழுக்கக் கேடுகளுக்கு அடிப்படை ஆடவர் இம்மைக்கும் மறுமைக்கும் பெற்று மகிழக்கூடியது புகழேயாம். புகழுடையவ்ர்கள் நிலத்திற்கு வளம் தருபவர்கள். பிறரை மகிழ்வுறுத்தலின் மூலம் வரும் புகழே சிறப்புடையது. இந்தப் புகழைப் பெறாதவர்கள் நிலத்திற்குச் சுமையாகிறார்கள் என்பது குறட்கருத்து.

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை

என்பது குறள்.

மனிதன் பலரோடு கூடி வாழப் பிறந்தவன். அதுவே மனித ஒழுக்கம். துறவிகளும் தொண்டரொடு கூடி வாழவேண்டும். சிலர், யாரும் தம்மை அணுகவியலாதபடி ஒதுங்கியும், ஒதுக்கியும் வாழ்கின்றனர். அவர்களிடத்தில் யாதிருந்து என்ன பயன்? இங்கனம் தனி விலங்காக வாழ்பவர் என்ன சாதனையைச் செய்யப் போகிறார்? அவர் இறந்த பிறகு இந்த உலகத்தில் எஞ்சியிருப்பது என்ன? மரணத்திற்குப் பின் பொருளைப் பிறிதொருவர் உரிமை கொண்டாடி எடுத்துக்கொள்வர். உடம்பு மண்ணுக்கு உரிமையாகி விடுகிறது. இவருக்கு உரியதாகவுள்ள புகழை விட்டுச் செல்லவேண்டாமா? என்பது திருவள்ளுவர் கேள்வி.

எச்சம்என் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன்

என்பது குறள், எச்சம் என்றால், குற்றம் என்ற பொருளும் உண்டு. பலர் குழத் தாம் வாழாமையைக் குற்றம் என்று எண்ணிப் பார்க்கின்றாரா? இல்லையா? குற்றத்தை எண்ணிப் பார்த்தலே குற்றத்தின் நீங்க வழி. ஆதலால், கொடுத்து மகிழ்ந்து பலர் சூழ வாழ்வதே வாழ்க்கை