பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உடம்பு, உள்ளம் இரண்டையும் அழித்துக்கொள்கிறான். ஐயோ, பாவம்! இதனை,

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்
றிதல் இயல்பிலா தான்

என்று கூறி விளக்குகிறது. குறள்.

உலகம் இன்பத்தின் வைப்பு. உயிர் இன்புறுதல் மூலமே அதன் வேட்கை தணிகிறது. அவ்வழிதான் உயிர் நிறைநலம் பெறுகிறது; இறைமைத் தன்மையை அடைகிறது. அதனா லன்றோ உயிர்க்கு இறைவன் நுண்ணிதில் இன்புறுதற் குரியனவாய கருவிகளாகிய பொறிகளையும் புலன்களையும் தந்ததோடன்றி இன்புறுதற்குரியனவாய பொருள்களையும் படைத்தருளினன்!

காதலின்பத்திற்கு உரிய பெண், இன்பத்தைத் தருபவள்; இன்பத்தைப் பெறுபவள். மிகச் சிறந்த நலன்கள் அனைத்தும் பெற்ற நங்கை ஒருத்தி தனியே வாழ்ந்து மூத்தாள் என்றால் என்ன பயன்? “தமியள் மூத்தற்று" என்ற சொற்றொடர் வினாவாகவும் விடையாகவும் இருக்கிறது. பெண் மணம் உடையவள். அது கொடியில் மலர்கிறது. கொடியின் மனம் பரப்பக் கொம்பு தேவை. நிறை நலம்பெற்ற நங்கை ஒருத்தி உரிய பருவத்தே கொழுநனாகிய தலைமகனைப் பெற்று மகிழ்தலும், மகிழ்வுறுத்தலுமில்லாமல் வறிதே மூப்பாளாயின் அவளுக்கும் பயனில்லை; மற்றவர்க்கும் பயனில்லை. உலகத்தின் இடையறாத வழிவழி மரபும் தடைப்படுகிறது.

இத்தகு கொடுமை போன்றதே, வறுமையுடையாருக்கு வழங்கி அவர்தம் வறுமையை மாற்றாதவனின் செல்வம் என்று திருக்குறள் கூறுகிறது. ஈயாதவனது செல்வத்தால் உடையானுக்குப் பயனில்லை. மற்றையோருக்கும் பயனில்லை. ஏன்? அந்தச் செல்வத்திற்கும் பயனில்லாமற் போய்விடுகிறது. இதனை,