பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

295


அற்றார்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று

என்ற குறள் எடுத்துக் கூறுகிறது.

மரம் நிழல் தருகிறது; கனிகளைத் தருகிறது. அருமையாகச் சில நச்சு மரங்களும் உண்டு. நச்சு மரமும் பழுக்கும்; அது நடுவூருள் நம் வீட்டுக்கு அருகில் பழுத்துக் கனிகளை உதிர்க்கும். யார் போய் எடுப்பர்? கிளிகளாவது வந்து கொத்திப் பார்க்குமா? இல்லை! அப்படியே மீறி யாராவது ஆசையின் மிகுதியால் அறியாமையின் காரணமாகத் தின்று விட்டால், தின்றவன் உயிரைக் கொல்லும். அதுபோல நடுவூருள் நமது தெருவில் நமக்குப் பக்கத்திலேயே ஓங்கி உயர்ந்த ஒரு மாளிகையில், நஞ்சு மனத்தோடு வாழ்கிறான் ஒருவன். அவனிடத்தில் ஏராளமான செல்வமுண்டு. ஆயினும் நெஞ்சில் நஞ்சுடையான் கையில் அகப்பட்ட செல்வமாக இருப்பதால், அச்செல்வமுடையானை யாரும் விரும்பிச் சேர்வது இல்லை. தவறிப் போய் யாராவது சேர்ந்தாலும் அவன் அவர்தம் உயிரை உறிஞ்சிக் குடிப்பானேயன்றி, வாழ்விக்கமாட்டான். இதனை

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று

என்று குறள் கூறுகிறது.

தண்ணீர் நமது விட்டுக் குழாய்க்கு வரவேண்டும். ஆனால், தண்ணீர் வரும் குழாய் பாசி பிடித்ததாக இருக்கு மானால், தண்ணீரின் துய்மை கெட்டு, பருகுவோரின் வாழ்க்கைக்கு உலை வைக்கிறது. அதுபோல, நமக்குச் செல்வம் தேவை. செல்வம் ஈட்டுவது மனிதனின் தலையாய கடமை. அதனை அறவழியிலேயே ஈட்டவேண்டும். ஆனால் செல்வம் அறத்தின் வழி வராது போனால், செல்வம் இன்பத்தைத் தருதற்கு மாறாகத் துன்பத்தைத் தருகிறது.