பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

301


அணிதலே சிறப்பு. அக அணிகலன்களை உடையோரே சான்றோர். அவற்றுள்ளும் நல்லன அல்லாதவற்றை நினைத்துழியும்கூட நாணும் இயல்புடைமையே சான்றோர்க்குச் சிறந்த அணி, இத்தகு சான்றோர் மதித்தற்குரியவர்கள். நாணுடைமை இல்லையேல், பீடுநடை பிணியாகும். சால்பின்றி-சால்புடையோர் போலக் காட்டிப் பீடுநடை நடத்தலால் வரும் துன்பம் அவராலும் மற்றவராலும் தாங்க முடியாமையாலேயே பிணி என்றார். இதனை,

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கஃ தின்றேல்
பிணியன்றோ பீடு நடை

என்று குறள் கூறுகிறது.

சிலர், தம்பழி நாணுவர். ஆயினும் பிறர் பழிகண்டு மகிழ்வர். ஏன்? பிறர்பழி காண்பதிலும், பிறர் பழி எடுத்துக் கூறுவதிலும் ஆர்வமும் காட்டுவர். இது சீருடைச் செயலல்ல; உண்மையான நாணுடைமையும் ஆகாது. நாணுடைமைக்கு உரியதாக உலகம் கருதுவது தம்பழி, பிறர்பழி ஆகிய இரண்டையும் கண்டு நாணுபவரையேயாம். இன்றைய உலகியலிலோ, பிறர் பழியில் தம் புகழ் வளர்க்க நினைக்கின்றனர். இந்த மனப்போக்கு புகழினைத் தராததோடு, காலப்போக்கில் பழியினையே தரும் என்பதறிக. இதனை,

பிறர்பழியும் தம்பழியும் நானுவார் நாணுக்
குறைபதி என்னும் உலகு

என்று குறள் கூறுகிறது.

உணவுப் பொருள்களாகிய காய்களும், கனிகளும் விளைவித்தற்குக் காடும், கழனியும் கிடைத்து, அவற்றை உழுது, எரு இட்டு, வித்திட்டு, நீர்பாய்ச்சி வளர்ப்பதவசியம். இவையெல்லாம் எவ்வளவு அவசியமோ, அதைப்போல அதை விடக்கூடவே அக்கழனிக்கு வேலி அவசியம். காடு