பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களையும் கழனிகளையும் பெருக்கி, வேலிகள் இல்லாது போயின் பாடுபட்டு வளர்த்த பயிர்கள் அழியும்.

அதுபோலவே, பலர் பல்வேறு வகைப்பட்ட நல்ல குணங்களை அரிதில் முயன்று பெறுகின்றனர். ஆயினும் ஒரோவழி இழந்துவிடுகின்றனர். ஆதலால், சான்றோர் நாணம் என்ற வேலியை அமைத்துக் கொள்ளாது, உலகத்தைப் பெறவிரும்பார் நாணம் உடைமையே உயிர்க்குப் பாதுகாப்பு. பழியும் பாவமும் புரிந்து, உயிர்க்குத் துன்பம் விளைவிக்காமல் உயிர்க்குப் பாதுகாப்பளிப்பதால் நாணுடைமை வேலியாகும். ஞாலமும் நானும் பெரும்பாலும் முரண்படா. அப்படி முரண்பாடு தோன்றின் சான்றோர் ஞாலத்திலிருந்து நாணையே பெறுவர். இதனை,

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்

என்று குறள் கூறி விளக்குகிறது. இதனையே "பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” என்று புறநானூறு கூறுகிறது.

உயிர் உடலொடு கூடித் துய்த்து, மகிழ்ந்து வாழ்தல் இன்பமேயாம்; பெறுதற்கரிய சிறப்புமாம். எனினும், உயிர்க்குரிய சிறப்பியல்புகளை இழந்து அதன்பின் உயிர் வாழ்தல் சிறப்பன்று. ஆதலால், நாணுடைமையைக் காப்பாற்றுவதற்கு உயிரையும் விலையாகக் கொடுப்பர் சான்றோர். இதற்குச் சான்று, அரச நீதிக்காகத் தன் உயிர் கொடுத்த பாண்டியன் நெடுஞ்செழியன்! நாணை விலைகொடுத்து உயிர் வாழ விரும்பமாட்டார்கள் சான்றோர். உயிரினும் நாண் சிறந்ததாகும். இதனை,

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்

என்ற குறள் விளக்குகிறது.