பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

303


சிலர் நாணமாட்டார்கள். இவர்கள் கண்டாரும் கேட்டாரும் வெறுக்கத் தக்க செயல்களையே செய்வர். அறியாமையின் காரணமாகவோ, அல்லது ஆசையின் காரணமாகவோ, தாம் நாணுதற்குரிய செயல்களை நாணாமற் செய்வர். இவர்கள் தம் குற்றம் நோக்கி நாணா தொழியின், இவர்களை நோக்கி அறம் நாணும்: நாணுத லோடன்றி நீங்கும். நாணுடைமையும் அறமும் நீங்கிய வழி பொருளும் நீங்கும்; புகழும் நீங்கும்; இன்பமும் நீங்கும். இதனை,

பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்க துடைத்து

என்று குறள் கூறுகிறது.

தாமே நாண வேண்டியது இயல்பு; ஒழுக்கமும் கூட அஃதின்றி இவன் செயல் கண்டு பிறர் நாணிய வழியும் நானாதிருப்பது இழிவுள் இழிவு என்பது கருத்து. நாணமற்ற வாழ்க்கையுடையோரை அறம் சேராது என்பது தெளிவான முடிவு. ஆதலால், தம்முடைய மனச்சான்று தவறு என்றும், செய்யாதே என்றும் இடித்துக் காட்டும் இடங்களில் மனிதன் விழிப்பாக இருந்து திருத்திக்கொள்ளவேண்டும்.

எல்லாருடைய மனச்சான்றிலும் நானும் இயல்பும், அறத்தினை எடுத்துக் காட்டும் இயல்பும் உண்டு. இதனையே அண்ணல் காந்தியடிகள் "அந்த ராத்மா பேசுகிறது” என்று குறிப்பிட்டார். ஆதலால், நம்முடைய அடிமனம் ஆங்கு உறையும் நல்லுணர்வு, உயிர்க்கு உயிராக உறையும் இறைவன் எடுத்துக் காட்டும் அறத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தராத்மாவின் பேச்சைக் கேட்காமல் இருப்பவர்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள் என்பதனை நினைந்து நம்மை நாமே நகைத்தும், திருத்தியும் வாழ்க்கையில் வெற்றி கொள்ளவேண்டும்.