பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1



மனம் ஒரு மாளிகை

அன்பு

வாழ்க்கை, உழைப்பு என்ற அச்சில் சுழல்கிறது என்பதே உண்மை. ஆனால், அந்த அச்சுத் தேயாமல் கழன்று ஓடாமல் பாதுகாப்பது அன்பேயாம். அன்பு அம்மம்மா! அன்பிற்கு எவ்வளவு ஆற்றல்! ஆற்றல்மிக்க அன்பு என்று அருள் நூல் கூறும். அன்பே சிவம் என்பது திருமந்திரம். அன்பு, உயிரின வாழ்க்கைக்கு மூச்சுப் போன்றது. அதனாலன்றோ வள்ளுவம், அன்பின் வழியது உயிர் நிலை என்றது.

உண்மையான ஒரு மனிதனுக்கு உயிர் இருக்கிறதா? இல்லையா? என்பதன் அடையாளம் அவனுடைய நட மாட்டமல்ல. அவன் உண்ணும் உணவின் அளவல்ல; அவனுடைய இனப் பெருக்கமுமல்ல. வீட்டில் சில நடைப் பிணங்கள், இடுகாட்டில் சில பிணங்கள் என்று யாரோ ஒரு பழுத்த மனிதர் சொன்னதைப் போல அன்பில்லாதவர்கள் வாழ்பவர்கள் ஆகார்.