பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நாணாகிய கதவு உறுதியுடையதாக அமையாது போனால், பெற்ற கல்வியும் பேணிய ஒழுக்கங்களும், செய்த தவமும் கெடும். தலைமகனாகிய உயிர் இன்பத்தை இழந்து துன்பத்திற்கு ஆட்படும். ஆதலால், மனச்சான்றை மதித்து அந்தராத்மாவின் குரலுக்கு மதிப்புக் கொடுத்து நாணுடைமையைப் பேணிப் பெருமையுடன் வாழ வழி நடத்துகிறது திருக்குறள் உலகம்.

குடிப் பெருமை காத்தல்

னிதன் தனித்துப் பிறந்தவனுமல்லன், தனித்து வாழப் பிறந்தவனுமல்லன். தான் பிறந்து வாழும் குடியினருடன் கூடிக் கலந்து, மகிழ்ந்து, வாழ்வித்து வாழ்தலே சீலம் நிறைந்த வாழ்க்கை தம்மைச் சார்ந்தோர் இளைத்துச் சாக, தாம் மகிழ்ந்து வாழ்தல் நாணத்தக்கதாகும். தாம் உண்டு மகிழ்வதைவிட, குடிசெயல் வகையில் மகிழ்வதும், உண்பதை விட உண்பிக்க உண்பதுவுமே சிறப்பு; உயர்வு. இன்ப உணர்வு கலந்த சுவையும்கூட. அஃதாலன்றோ, ஒருவர்க்குக் குழந்தைப் பருவத்தில் தாயும், இளமைப் பருவத்தில் மனைவியும், முதுமைப் பருவத்தில் மகனும் உண்பிக்கும் பொறுப்பினைகடமையினை ஏற்றுக் கொள்கிறார்கள்.

இது போக, வீட்டுச் சிறப்பு நிகழ்ச்சிகளிலும், திருக் கோயில் திருவிழாக்களிலும் பலர் கூடி விருந்துண்டு மகிழ்தலைக் காண்கின்றோம்; பலர் கூடி உண்பதென்பதே சிறப்பல்ல. உணர்வுடன் கூடிய உறவு கலந்து உண்பதே சிறப்பு. உறவு கலந்து உண்ணக் கண்டீர் என்றார் தாயுமானாரும். ஒருவன் தன்னுடைய குடியை உயர்த்தும் பணியில் ஈடுபட்டு, குடி உயரும் வரையில் பசி நோக்காது பணியாற்றுவான். அங்ஙனம், ஆற்றுபவனே மனிதன், பெருமைக்குரியவன், என்று குறள் பேசுகிறது.