பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

309


நஞ்சினைத் தாங்கி, சமூகத்துக்குள் அடிவைக்கின்றவன் தன் வாழ்க்கையில் வெற்றி பெறுவதுமில்லை; தன்னலமும் நிறைவேறுவதில்லை: மாறாக சமூகத்துக்கும் கேடு செய்கிறான்.

உயிர், உடலின் நலனுக்காகப் பொறிகள் சுவைக்காமல் தன் நலனுக்காகச் சுவைக்குமானால், அது பொறிக்கும் கேடு; உயிருடலுக்கும் கேடு. அதுபோலத் தம்மைச் சார்ந்தோரின் நலனைக் கருதி உழைத்தல் சிறந்த ஒழுக்கமாகும். தம்மைச் சார்ந்தோர் மேம்பாட்டுக்கும் நல்வாழ்க்கைக்கும் உழைப் பதற்கு நல்லெண்ணம், நம்பிக்கை, பொறுத்தாற்றல், அடக்கம், எளிமை முதலிய பல்வேறு குணச்சிறப்புகள் தேவை. ஒருவர் சமூகத்தில் கலந்து பழகி, சமூக மேம்பாட்டுக்குரிய பணிகளைச் செய்து அதில் வெற்றியும் கண்டு சமூகம் இவரைத் தனது உடைமையாகக் கருதுகிற அளவுக்கு உயர்தல் என்பது ஒருகலை! இல்லை, அதுவே தெய்வீக வாழ்வு!

இத்தகைய வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு இடையூறாக இருக்கின்ற சமூக ஒழுக்கக் குறைகள், குற்றங்கள் இல்லாதவனாக நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்; பண்படுத்திக் கொள்ளவேண்டும். இங்ஙனம் வாழக் கற்றுக்கொண்டவர்களை உலகமே சுற்றமாகச் சுற்றும்.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு

என்று திருக்குறள் கூறுகிறது.

உலகத்தின் சிறப்புகள் நல்லாண்மையின் படைப்பு களேயாம். அதனாலன்றோ, புறநானூற்றுக் கவிஞர்,

எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே

என்று கூறினார்.