பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கண்டாலே ஒதுங்கி ஒளிந்து விடுவார்கள். அப்படியே கேட்டாலும் அவர்கள் நன்குணர்ந்து சொன்னாலும் பரிவோடு கூறினாலும் அதைப் பிழைப்புக்கு வழியென்றே கருதுவர். ஆதலால், வறுமையாளரின் கல்வி பயன்படாது. அவர்தம் சொல்லும் பயன்படாது. கல்லாதவர்களாக இருந்தாலும் "வெள்ளையப்பன்" இருக்குமானால் அவர்தம் சொற்கள் மிகச் சிறந்த கல்வி கேள்வி ஆயதாக நாட்டு மக்கள் கருதுவார்கள். ஆதலால், கல்வியும் கருத்தும் பயன்பட வேண்டுமானாலும் வறுமையைத் தொலைக்க வேண்டும். ஆனால் இன்றோ, கல்வியும் கருத்தும் வாணிகமாக்கப்பெற்று வருகின்றன. அதனால்தான் நாட்டில் நாள்தோறும் எண்ணற்ற மேடைகளில் சொல்லப்படும் சொற்கள் பயன் தராமல் போகின்றன போலும்! இதனை,

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்

என்றார்.

வறுமை அன்புணர்ச்சிகளைத் தொட்டுத் தூண்டாது. ஒரோவழி தூண்டப் பெற்றாலும் அந்த அன்பு செயல்பட வழியில்லை. வறுமையின் காரணமாகப் பயன்படாத அன்பினை ஏற்றுக் கொள்பவர் யார்? காரியமற்ற அன்பு, விசுவாசம், உண்மை ஆகியன அனைத்தும் பயனற்றவையே யாம். வறுமை அன்பைத் தடை செய்தலோடு, அறத்தினையும் தடை செய்யும். வறுமை அறத்தோடு இயைபில்லாதது; சார்பில்லாதது. வறுமையாளன் வாழ்க்கை பெரும்பாடாகிவிடும். ஆதலால் நாட்டில் வறுமையை வைத்துக்கொண்டு-அன்பு வளரவேண்டும்; அறம் வளர வேண்டும்; ஒழுக்கம் வளர வேண்டும் என்றெல்லாம் வாடாத வயிற்றினையுடையோர் அணி, பிரச்சாரம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் சமாதானம் கூறுகிறார்கள், "வறுமையில் செம்மை" என்று! அவர்கள் கூற்றுப்படியே வறுமையில் செம்மையாக இருக்கலாம். அது