பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒன்றினை அனுபவித்தலோ இரண்டும் கெட்ட நிலையை உருவாக்கும். இஃது எரிந்த வைக்கோற்போரில் ஒரு பகுதியை அணைத்து விட்டோம் என்று கூறி அமைதி கொண்டது போலாகும். முற்றிலும் இச்சையை ஒடுக்குதலே துவரத் துறத்தல் ஆகும் என்கிறார் வள்ளுவர். இத்தகு துறவு நெறி நடைமுறையில் இந்த வையகத்தில் இல்லை. ஒருக்கால் மக்கள் பயிலாத பெருமலைக் காடுகளுக்குள் இருக்கலாம். இருப்பர் என்றே நம்புகின்றோம்.

மானுடராய்ப் பிறந்தோர் முயன்று உழைத்து உறுபொருள் ஈட்டி, பெறுவன பெற்றுத் துய்த்து மகிழ வேண்டும். இஃது இல்லாதார் இச்சைகளைத் துறந்து விடுதல் வேண்டும். இதில் ஏதொன்றும் செய்யாது செய்யத் துணிவில்லாது அல்லற்படுவோர் அதிசயப் பிறவிகள். அவர்தம் இச்சையோ, வெறிபிடித்துத் தூண்டுகிறது. அதனால் அடுத்த வீட்டு உப்புக்கும் காடிக்கும் கூற்றாகின்றார்கள். இங்கு அடுத்த வீட்டு நுகர்பொருளை உப்பென்றும் காடியென்றும் வள்ளுவர் ஏன் சொன்னார்? தரத்தில் உயர்ந்த நுகர்பொருள்கள் கோட்டைகள் போல் உயர்ந்த மாளிகைகளிலேயே! ஆங்கு இந்த அப்பாவி எப்படிச் செல்ல முடியும்? உப்பு கூழும் குடிசைகளின் சொத்து. ஆங்கு எளிதில் செல்லமுடியும். மாளிகை கட்டி வாழ்பவன் மன இரக்கத்தின் மரணப்படுக்கையிலேயே கட்டி வாழ்கிறான். குடிசையில் வாழ்பவன் குடிசையில் தங்கியுள்ள குளிர் நிழலைப்போல் ஈர நெஞ்சினன்; இரக்க உணர்வினன்; இல்லையென்று சொல்லாது ஒரே வேளைக்குரிய உப்பையும் கூழையும் கூடக் கொடுத்து விடுவான். அவனுக்கு இவறிக்கூட்டி வட்டிக் கணக்கிட்டும் பழக்கமில்லை. ஆதலால் போலும் உப்புக்கும் காடிக்கும் கூற்று என்றார்! துறத்தலாவது பொறிகளின் இச்சையை மட்டும் அடக்குதலல்ல. புலன்களின் இச்சை யையும் அடக்குதல், "புலனழுக்கற்ற அந்தணாளன்” என்று புறநானூறு பேசும். திருக்கோயில் மதிற்கவர் இடைவெளி