பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

329


களுக்கிடையில் செடிகள் முளைப்பதுண்டு. திருக்கோயிலைப் பாதுகாக்க இந்தச் செடிகளை அப்புறப்படுத்த வேண்டும். சிலர் இந்தச் செடிகளை வேரொடு வெட்டாமல் மதிலுக்கு வெளியில் தெரிகின்ற பகுதியை மட்டும் வெட்டிவிடுவர். இடைவெளிகளுக்கிடையில் வேர் எஞ்சி நிற்கும். செடியின் உயிருக்கும் வெளிச்செல்லுதல் தடைப்பட்டமையின் காரணமாக உள்ளேயே முன்னையிலும் ஊக்கமாகப் பருத்து வளர்ந்து மதிலுக்கே கேடு செய்யும். அதுபோல மனத்தில் தோன்றும் இச்சை, புலன்களில் பரவி, பொறிகள் வாயிலாக வெளிப்படுகின்றது. பொறிகளின் இச்சையை மாற்றினால் புலன்களில் தங்கிவிடும். ஒருசேர புலன்களிலும், பொறி களிலும் இச்சையில்லாமல் இருப்பது சிறப்பு. புலன்களில் இச்சையின்றி ஒரோவழி பொறிகளில் இச்சையிருக்கலாம். இது தவறேயாயினும் கேடில்லை. காலப்போக்கில் மாறும். பொறிகளில் இச்சையின்மை காட்டிப் புலன்களில் இச்சை தாங்கி வாழ்தல் பெருங்கேடு. வெளியறியா மரப்பொந்தில் விழுந்த நெருப்புப் போன்றது. எரிவது வெளியே தெரியாது. ஆனால் உள்ளே எரித்து அழிக்கும். உப்பு இனிமை என்றும் பொருள்படும். காடி, நடுவு நிலை என்றும் பொருள்படும். நுகரும் பொருள் இல்லாதார் முயன்று பெற முடியாதார் துறத்தலுக்கும் துணியாராயின், அவர் தம் இனிமைப் பண்பும் அவர்தம் நடுவு நிலையும் கெடும். தாமே வளர்த்துக் கொண்ட இனிய பண்பையும் நடுவு நிலைமையையும் இழந்து பொருளோடு கூடிய நல்குரவோடு, உயிர்ச் சார்பான குணத்தின் வறுமையும் ஏற்றக்கொள்வது தற்கொலைக்கு ஒப்பு. அதனால் கூற்று என்றார்.

வறுமை மிகமிகக் கொடியது. வறுமை பசியினால் வருத்துகின்றது; ஊக்கத்தைக் கெடுக்கின்றது; இனிய பண்புகளைக் கெடுக்கின்றது; கருணையிற் சிறந்த கடவுளினின்றும் விலக்குகின்றது. திருவள்ளுவருக்கு வறுமையின் மீது ஏராளமான கோபம். அதனால் 'இன்மை' என்ற பெயர்