பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உடைக்கின்றாரோ அவருக்கே கொடுப்பர் மற்றபடி வாட்டமுற்ற மக்களுக்கு ஈரக் கையைக் கூட உதறமாட்டார். அதாவது தன்னை வருத்துவோருக்கு அச்சம் நோக்கிக் கொடுப்பார்களே தவிர, 'ஈதல் அறம்' என்ற நெறிக்கு இவர்கள் வெகுதூரம்.

அறத்தின் அடிப்படையில் கொடுத்தால் சிறிது கொடுத்தாலும் போதும்; வாங்குகிறவர்களும் மன நிறைவு அடைவார்கள். வருத்தத்திற்கு அஞ்சிக் கொடுத்தால் மேலும் மேலும் வருத்திப் பெற முயலுவர். வருத்துபவர்களுக்குப் பணம் கொடுத்துப் பழகுவது வறண்ட பாலைவனத்தில் நடப்பதோடொத்த துன்பத்தைத் தரும். இங்ஙணம் செல்வம் சேர்ந்து கயமைத்தன உணர்ச்சி பெருகி வளர்வதே பலாத்காரப் புரட்சிக்கு வித்திடுகிறது.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கைய ரல்லா தவர்க்கு

என்று இதனைக் குறள் கூறுகிறது.

சான்றோர் சொல்லப் பயன்படுவர் நல்ல மனமுடையவர்கள் சொன்னதைச் செய்வர்; சொன்ன அளவிலேயே அறத்தினைச் செய்வர்; உதவி செய்து உவப்பர்; எடுத்துக்காட்டிய கடமைகளைச் செய்வர். ஆனால் கீழ்மைத் தனமுடையவர்களோ சொன்னால் செய்யமாட்டார்கள். அவர்கள் கடமை தவறுதலுக்கு அஞ்சிப் பயப்படுவதில்லை. காரியக் கேட்டுக்கும் அஞ்சிப் பயப்படுவதில்லை. மற்றவர் வருத்தம் பார்த்தும் அஞ்சமாட்டார்கள். அவர்கள் அஞ்சுவதெல்லாம் அடிக்கும் உதைக்கும் தானே! ஆதலால் கீழ்க்குணம் உடையவர்களை நையப்புடைத்தாலே சொன்னதைக் கேட்பார்கள்; சொன்னதைச் செய்வார்கள்.