பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

349


இந்த நியதி தாவரங்களிடையிலும் விலங்குகளிடை யிலும் விளக்கமாக அமைந்துள்ளது. இன்றுள்ளதைப் போல உலக மக்கள் தொகை ஒரு மடங்கு கூடினாலும் இந்த உலகத்தில் உண்டு மகிழ்ந்து வாழப் பொருள்கள் உண்டு. ஆயினும் தனிமனிதனின் பேராசைக்கு இரை போட முடியவில்லை. அந்தோ, பரிதாபம்!

இந்த உலகில் பலர் வறுமையில் கிடந்து உழல்கின்றனர்! ஏன்? பிறர் நலத்துக்கென உழைப்பவர்களின் எண்ணிக்கை சிலவாகப் போனதே காரணம்.

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்

என்பது குறள். காலப்போக்கில் நாகரிக வளர்ச்சியில் உயிர்க்குலம் பயனுறச் செய்யும் பணிகள் பல அரசின் கடமையாகி, அரசு அப்பணிகளை நிறைவேற்றும் நெறிமுறைகளைக் காண்கின்றன. அரசின் கடைமைகள் மக்கள் நலமுற வாழ்வதற்குரிய பணிகளைச் செய்வது தான்! அரசுப் பணிமனைகளில் பணி செய்பவர்கள் அறநெறி வழியில் சிந்தித்துத் தொண்டு செய்பவர்கள் தாம்! பிறர் வாழப் பணி செய்யும் நோன்மை நோற்பவர்கள் தாம்!

ஒரு காலத்தில ஊதியமில்லாமல் சமூக அடிப்படையில்-பண்பாட்டு அடிப்படையில் செய்த பணிகள் அவை! ஆனால், இன்று பல நூறாயிரம் பேர் கைநிறைய ஊதியம் வாங்கிக் கொண்டு அப்பணிகளைச் செய்கின்றனர்! ஆயினும், கணக்கு கழிக்கப் பெறுகிறதே தவிர, நோன்பு நோற்கவில்லை! அப்பணிகள் தரம் இழந்துவிட்டன. அவர்க்ள் மக்களுக்குச் செய்வதைச் சலுகையாகக் கருதுகிறார்கள். சில சமயங்களில் சலுகைக்குரிய அன்பளிப்பு